மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் கீழ் 2026ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் 2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட முன்மொழிவுகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நடைபெற்றுள்ளது. ஜனாதிபதி அலுவல…
மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் கீழ் 2026ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் 2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட முன்மொழிவுகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நடைபெற்றுள்ளது.
ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (20.07.2026) நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் கீழ் செயற்படும் நிறுவனங்களின் வேலைத்திட்டங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.
இதன்போது, இலங்கை மகளிர் பணியகம், பெண்கள் தொடர்பான தேசிய ஆணைக்குழு, முன்பிள்ளைப் பருவ அபிவிருத்திக்கான தேசிய செயலகம், நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம் மற்றும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை ஆகியவற்றின் திட்ட முன்னேற்றங்கள் தொடர்பில் அதிகாரிகள் விளக்கமளித்தனர்.
கர்ப்பிணித் தாய்மார்களுக்கான போஷாக்கு உணவுப் பொதித் திட்டம், முன்பள்ளி சிறுவர்களுக்கான காலை உணவு வழங்கும் திட்டம், முன்பள்ளி ஆசிரியர்களுக்கான ‘குரு அபிமானி’ கொடுப்பனவு, தெருவோர சிறுவர்களுக்கான வாழ்வாதார உதவி மற்றும் சிறுவர் பராமரிப்பு திட்டங்கள் உள்ளிட்ட முக்கிய வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் ஜனாதிபதி கவனம் செலுத்தினார்.
கர்ப்பிணித் தாய்மார்களுக்கான போஷாக்கு உதவித் திட்டம் வெறுமனே நிதி உதவியாக அல்லாமல், அவர்களின் போஷாக்கு நிலையை மேம்படுத்தும் நோக்கத்துடன் முறையாக கண்காணிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், ‘டித்வா’ சூறாவளியினால் பெற்றோரை இழந்த சிறுவர்களுக்கான மாதாந்த உதவிக் கொடுப்பனவு வழங்கும் திட்டத்தின் முன்னேற்றமும் இதன்போது மீளாய்வு செய்யப்பட்டதுடன், உரிய பயனாளிகளுக்கு உதவிகள் தாமதமின்றி கிடைப்பதை உறுதி செய்யுமாறு ஜனாதிபதி வலியுறுத்தினார்.

