தேர்தல் காலத்தில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிய தற்போதைய அரசு, வரம்பற்ற வரி விதிப்புகள் மற்றும் எரிபொருள் மாபியாக்கள் மூலம் மக்களைக் கொடூரமாகச் சுரண்டி வருகின்றது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்பாட்டாளர் ஆனந்த பாலித கடுமையாகக் குற்றஞ்சாட்டியுள்ளார். கொழு…

தேர்தல் காலத்தில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிய தற்போதைய அரசு, வரம்பற்ற வரி விதிப்புகள் மற்றும் எரிபொருள் மாபியாக்கள் மூலம் மக்களைக் கொடூரமாகச் சுரண்டி வருகின்றது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்பாட்டாளர் ஆனந்த பாலித கடுமையாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

"நாட்டின் மொத்த நெல் உற்பத்தியில் வெறும் 2 சதவீதத்தை மட்டுமே அரசு கொள்வனவு செய்வதால், விவசாயிகள் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர்.உடன் விசாரணை நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லாத நிலையிலும், கியூ.ஆர். முறையினால் முச்சக்கரவண்டி சாரதிகள் உள்ளிட்ட பலரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. தேர்தல் காலத்தில் எளிய மக்களுடன் இணைந்து செயற்பட்ட லால் காந்த, வசந்த சமரசிங்க போன்ற தலைவர்கள், குறுகிய காலத்துக்குள் மாளிகை போன்ற சொகுசு வீடுகளையும் வாகனங்களையும் வாங்கியது எப்படி என்பது குறித்து ஜனாதிபதி உடனடியாக விசாரணை நடத்த வேண்டும்.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு அரசே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும்" என்றார்.

தொடர்ந்து உரையாற்றிய ஆனந்த பாலித, "அன்று பொதுமக்களின் குரலாக ஒலித்தவர்கள், இன்று அமைச்சர்களானதும் மக்களின் பிரச்சினைகளை அலட்சியப்படுத்தும் வகையில் செயற்படுகின்றனர். இந்த மக்கள் விரோத அரசின் போக்கை முறியடிப்பதற்கு, உழைக்கும் மக்களும் விவசாயிகளும் ஒன்றிணைந்து வீதிக்கு இறங்கிப் போராட வேண்டும்" என்றும் அறைகூவல் விடுத்தார்.