மண்ணெண்ணெயை எரிபொருளாக பயன்படுத்தி இயக்கப்பட்ட நான்கு தனியார் பயணிகள் பேருந்துகளை அம்பலாங்கொடை பொலிஸார் நேற்று (07) மாலை மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது பறிமுதல் செய்துள்ளனர். அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் லங்கா…
மண்ணெண்ணெயை எரிபொருளாக பயன்படுத்தி இயக்கப்பட்ட நான்கு தனியார் பயணிகள் பேருந்துகளை அம்பலாங்கொடை பொலிஸார் நேற்று (07) மாலை மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது பறிமுதல் செய்துள்ளனர்.
அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் லங்காதேவ தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே இந்த பேருந்துகள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலி – கொழும்பு மற்றும் அம்பலாங்கொடை – எல்பிட்டிய வழித்தடங்களில் சேவையில் ஈடுபட்டிருந்த நான்கு பேருந்துகளே இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சோதனையின் போது, சில பேருந்துகள் முழுமையாக மண்ணெண்ணெயை பயன்படுத்தி இயக்கப்பட்டிருந்ததுடன், ஏனைய சில பேருந்துகள் டீசலுடன் மண்ணெண்ணெயைக் கலந்து இயக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பேருந்துகளின் சாரதிகள் நால்வரும் பலப்பிட்டிய நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை அம்பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

