இலங்கையில் டெங்கு நோய் பரவல் தீவிரமடைந்துள்ள போதிலும், அரசு அதனைத் தடுப்பதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்காது, அரசியல் பிரசாரங்களிலேயே கவனம் செலுத்தி வருகின்றது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி சாகர காரியவசம் குற்ற…

இலங்கையில் டெங்கு நோய் பரவல் தீவிரமடைந்துள்ள போதிலும், அரசு அதனைத் தடுப்பதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்காது, அரசியல் பிரசாரங்களிலேயே கவனம் செலுத்தி வருகின்றது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி சாகர காரியவசம் குற்றம் சாட்டியுள்ளார்.

பத்தரமுல்லையிலுள்ள கட்சியின் தலைமையகத்தில் இன்று(20.07.2026) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

டெங்கு நோய் பரவல் அதிகரிப்பு

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த வருடத்தில் இதுவரை 53 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளன.

நேற்று கூட 16 வயதுடைய சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். அரசின் கிளின் சிறிலங்கா திட்டம் என்பது பெயரளவில் மட்டுமே உள்ளது. இதில் வீதிப் பயனாளிகளின் வாகனங்களைச் சோதனையிடுவதும், அரச நிறுவனங்களுக்குள் தமது ஆதரவாளர்களை உள்வாங்குவதுமே நடக்கிறதே தவிர, நாடு சுத்தப்படுத்தப்படவில்லை.

இவ்வாறான அலட்சியப்போக்கினால் நிகழும் ஒவ்வொரு மரணத்திற்கும் அரசே பொறுப்புக்கூற வேண்டும் என்றார்.

நாட்டில் இடம்பெற்று வரும் தொடர்ச்சியான மர்ம மரணங்கள் குறித்து கடும் சந்தேகத்தை வெளியிட்ட அவர், சில உயிரிழப்புகள் தற்கொலை என முன்னரே அறிவிக்கப்படுவது விந்தையாக உள்ளது என்றும் குறிப்பிட்டார்.

தொடர் மர்ம மரணங்கள் 323 கொள்கலன் திருட்டு விவகாரத்தில் முறைப்பாடு செய்த நபர், நந்தன குணதிலக, கபில சந்திரசேன, திறைசேரி அதிகாரி மற்றும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் எனப் பலர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர்.

முன்னாள் பொலிஸ்மா அதிபரின் மரணம் குறித்து செய்தி வருவதற்கு முன்பே, அது தற்கொலை எனப் பொலிஸ் அதிகாரி ஒருவர் அறிவித்தமை பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. அரசுக்கு எதிராகச் செயற்படுபவர்கள் மர்மமாக இறப்பதும், பின்னர் அவை தற்கொலை எனப் பிரச்சாரம் செய்யப்படுவதும் ஜனநாயகத்துக்குப் பொருத்தமற்றது என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

அரசு டெங்கு மற்றும் கோவிட் 19 நோயைக் கட்டுப்படுத்திய அனுபவமுள்ளவர்களின் ஆலோசனைகளைப் பெறாது, தனது அகந்தையுடன் செயற்படுகின்றது என்று தெரிவித்த சாகர காரியவசம், இத்தனை சர்ச்சைகளுக்கு மத்தியிலும் பிரதம நீதியரசரின் பதவிக்காலத்தை நீடிப்பதற்கு அரசு ஏன் இவ்வளவு தீவிரமாக முயற்சிக்கின்றது என்பது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றதும் என்றார்.

அரசியல் நிகழ்ச்சி நிரல்களைத் தள்ளிவிட்டு, மக்களின் உயிரைக் காக்க அரசு முன்வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.