கொழும்பு பகுதியில் உள்ள நான்கு மருந்தக உரிமையாளர்களுக்கு, மாலிகாகந்த மேலதிக நீதவான் நீதிமன்றம் சுமார் இரண்டரை இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான அபராதத்தை விதித்துள்ளது. சிறிய குழந்தைகளுக்கு வழங்கக்கூடிய காலாவதியான மருந்துகளை விற்பனை செய்தமை மற்றும் தகுதியான மருந்தாளுநர்கள் இன்றி மருந…

கொழும்பு பகுதியில் உள்ள நான்கு மருந்தக உரிமையாளர்களுக்கு, மாலிகாகந்த மேலதிக நீதவான் நீதிமன்றம் சுமார் இரண்டரை இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான அபராதத்தை விதித்துள்ளது.

சிறிய குழந்தைகளுக்கு வழங்கக்கூடிய காலாவதியான மருந்துகளை விற்பனை செய்தமை மற்றும் தகுதியான மருந்தாளுநர்கள் இன்றி மருந்தகங்களை நடத்திச் சென்றமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் இவர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்டிருந்தன.

தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை அதிகார சபையின் தலைமை உணவு மற்றும் மருந்து பரிசோதகர் நெவில் விக்ரமசிங்க தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட அதிரடி சோதனைகளின் போது, இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்டமையைத் தொடர்ந்து, நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியது.

தண்டனை விதிக்கப்பட்டவர்கள்:

மொஹமட் கௌஸ் அன்சார் (மரதான, 'சிறி மெடிக்கல்' மருந்தகம்) கனகரத்தினம் அமீர்த்த கஜனன் (கொழும்பு 15, ஹேனமுல்ல மருந்தகம்) ஐ.எல். சில்மி (மரதான, 'கிராண்ட் பார்மசி அண்ட் கிரோசரி') நவாஸ் மொஹமட் நஸ்ஹார் (கொழும்பு 14, 'கோல்டன் கெமிஸ்ட்')

விசாரணைகளின் அடிப்படையில், நான்கு தனித்தனி வழக்குகளின் கீழ் காலாவதியான மருந்துகளை விற்பனை செய்தமை. தகுதியான மருந்தாளுநர்கள் இன்றி மருந்தகங்களை நடத்திச் சென்றமை. முறையான அனுமதிப்பத்திரம் இன்றி மருந்தகங்களை இயக்கியமை. வைத்தியரின் பரிந்துரைச் சீட்டு (Prescription) இன்றி மருந்துகளை விநியோகித்தமை. பதிவு செய்யப்படாத மருந்துகளைப் பதுக்கி வைத்திருந்தமை. வைத்தியர்களுக்காக வழங்கப்பட்ட மருந்து மாதிரிகளை (Drug Samples) சட்டவிரோதமாகக் களஞ்சியப்படுத்தியமை. ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.