விபத்துக்களினால் பறிபோகும் இலங்கையர்களின் உயிரை காப்பாற்றுவதற்கான விழிப்புணர்வு நிகழ்வு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆர்.முரளீஸ்வரன் தலைமையில் மாவட்ட தொற்றா நோய் தடுப்பு அதிகாரி எம்.ரூதேசன் ஏற்பாட்டில் பிராந்திய சுகாதார பணிமனையில் நேற்று (06) இடம் பெற்றது. நாடளாவிய ரீதிய…

விபத்துக்களினால் பறிபோகும் இலங்கையர்களின் உயிரை காப்பாற்றுவதற்கான விழிப்புணர்வு நிகழ்வு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆர்.முரளீஸ்வரன் தலைமையில் மாவட்ட தொற்றா நோய் தடுப்பு அதிகாரி எம்.ரூதேசன் ஏற்பாட்டில் பிராந்திய சுகாதார பணிமனையில் நேற்று (06) இடம் பெற்றது.

நாடளாவிய ரீதியில் தேசிய விபத்துத் தடுப்பு ஆலோசனைக் குழு மற்றும் சுகாதார அமைச்சின் தொற்றா நோய்கள் பிரிவினால் விபத்துக்களால் பறிபோகும் உயிரை காப்பாற்றுவதற்கான செயற்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு நாளும் ஒரு விசேட திட்டத்தைச் செயல்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

நேற்று (06) முதல் 10ஆம் திகதி வரை வீதி விபத்துத் தடுப்புத் தினமாகவும், ஜூலை 07, வேலைத்தள விபத்துத் தடுப்பு தினமாகவும், ஜூலை 08, வீடு மற்றும் முதியோர் இல்ல விபத்துத் தடுப்பு தினமாகவும், ஜூலை 09, நீரில் மூழ்கி இறக்கும் விபத்துத் தடுப்பு தினமாகவும், ஜூலை 10, பாலர்  பாடசாலை மற்றும் பகல்நேரப் பராமரிப்பு நிலைய விபத்துத் தடுப்பு தினமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வருடா வருடம் இலங்கையில் 100,00 மேற்பட்ட மரணங்களும் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 300 தொடக்கம் 350 மரணங்களும் பதிவாகின்றன.

மாவட்டத்தில் கடந்த வருடம் கிடைக்கப் பெற்ற புள்ளிவிபர தரவுகளின் படி 31,000 நபர்கள் உள்நோயாளராகவும், வெளிநோயாளர்களாக 8,000 மேற்பட்ட நபர்கள் சிகிச்சை பெற்றுள்ளனர்.

நாட்டில் உள்ள அரச மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படும் நோயாளிகளில் அதிக சதவீதத்தினர் விபத்துக்களாலேயே சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவற்றில் விழுதல், வீதி விபத்துக்கள், தீக்காயங்கள், மின் அதிர்ச்சி, வெட்டு காயங்கள், வேலைத்தள விபத்துக்கள், நீரில் மூழ்குதல், விலங்குகள் கடித்தல் மற்றும் வீட்டு விபத்துக்கள் ஆகியவை முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன.

சுகாதார அமைச்சு அபாயப் பகுதிகளைக் கண்டறியும் நடவடிக்கைகளையும், பாதுகாப்பான சூழலை உருவாக்குவதற்கான நடைமுறைத் திட்டங்கள் மற்றும் நாடு முழுவதும் விபத்துக்களைக் குறைப்பதற்கான குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால நடவடிக்கைகளைச் செயல்படுத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சு விபத்துக்களின் தாக்கத்தைக் குறைப்பதற்கு பல்வேறு வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.