இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் டேவிட் பைன், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான ஜே. எஸ். அருள்ராஜை இன்று (14) சந்தித்து, மாவட்டத்தின் தற்போதைய நிலைமைகள் மற்றும் எதிர்கால அபிவிருத்தி வாய்ப்புகள் குறித்து விரிவாக கலந்துரையாடினார். மட்டக்களப்பு புதிய மாவ…

இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் டேவிட் பைன், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான ஜே. எஸ். அருள்ராஜை இன்று (14) சந்தித்து, மாவட்டத்தின் தற்போதைய நிலைமைகள் மற்றும் எதிர்கால அபிவிருத்தி வாய்ப்புகள் குறித்து விரிவாக கலந்துரையாடினார்.

மட்டக்களப்பு புதிய மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், மாவட்ட அபிவிருத்தி, அனர்த்த முகாமைத்துவம், சுற்றுலாத்துறை, மீன்பிடித் தொழில் மற்றும் பொருளாதார முன்னேற்றம் தொடர்பான பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டன.

இதன்போது, மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள், அவற்றுக்காக ஒதுக்கப்பட்ட நிதி, பாலங்கள், வீடுகள் மற்றும் வீதி உட்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் குறித்து மாவட்ட அதிகாரிகள் உயர்ஸ்தானிகருக்கு விளக்கமளித்தனர்.

மேலும், அபிவிருத்தித் திட்டங்கள் மூலம் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றனவா என்பது தொடர்பிலும் உயர்ஸ்தானிகர் ஆர்வத்துடன் கேட்டறிந்தார்.

சந்திப்பின் போது கருத்து தெரிவித்த உயர்ஸ்தானிகர் டேவிட் பைன், எதிர்காலத்தில் ஆண்டுதோறும் சுமார் ஒரு இலட்சம் நியூசிலாந்து சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு வரவழைக்கும் திட்டத்தை முன்னெடுக்க எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

இந்த முயற்சி மட்டக்களப்பு உள்ளிட்ட கிழக்கு மாகாணப் பகுதிகளின் சுற்றுலாத்துறை மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

மேலும், பாசிக்குடாவை முன்மாதிரியாகக் கொண்டு கிழக்கு கரையோரத்தின் ஏனைய பகுதிகளையும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் அபிவிருத்தி செய்ய தாம் ஆதரவு வழங்கத் தயாராக இருப்பதாகவும் உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டார்.

இந்தச் சந்திப்பில் மேலதிக அரசாங்க அதிபர் சுதர்க்ஷினி ஸ்ரீகாந்த் உள்ளிட்ட மாவட்ட செயலகத்தின் பல உயரதிகாரிகளும் கலந்துகொண்டனர்.