மட்டக்களப்பு மாவட்ட சுற்றுலா உப குழுவின் மாவட்டத்தில் சுற்றுலாத் துறை அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான ஜே எஸ் அருள்ராஜ் அவர்களின் ஏற்பாட்டில், பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்களின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கந்தசாமி பிரபு அவர்களி…
மட்டக்களப்பு மாவட்ட சுற்றுலா உப குழுவின் மாவட்டத்தில் சுற்றுலாத் துறை அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான ஜே எஸ் அருள்ராஜ் அவர்களின் ஏற்பாட்டில், பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்களின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கந்தசாமி பிரபு அவர்களின் தலைமையில் நேற்று (14) புதிய மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தின் 14பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் அடையாளம் காணப்பட்ட சுற்றுலா அபிவிருத்தி மேற்கொள்ளப்பட வேண்டிய இடங்கள், அவற்றுக்காக அமைச்சு மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி போன்றவற்றுக்கு அபிவிருத்தி செய்வதற்கு வரையப்பட்ட முன்மொழிவுகள் , அவற்றுக்கு அவசியமான நிதி ஒதுக்கீடுகள், இந்தத் திட்டங்கள் நிறைவடைந்த பின்னரான செயல்பாடு மற்றும் பராமரிப்புக்கான ஏற்பாடுகள், அது தொடர்பாக ஒத்துழைப்பு வழங்கக்கூடிய நிறுவனங்களின் அனுமதி பெறுதல், சுற்றுலா நாட்காட்டி, என்பன தொடர்பாக மாவட்டத்தின் சுற்றுலாப் பிரிவிற்கு பொறுப்பான மாவட்ட செயலக திட்டமிடல் பிரதி பணிப்பாளர் ரி. நிர்மலராஜ் தெளிபடுத்தினார். இதன்போது தற்போது முன்னுரிமை வழங்கப்பட்டுள்ள மட்டக்களப்பு வாவி நுழைவாயில் வீதி, மாரியம்மன் கோயில் வீதிகளின் நிருமாணம் மற்றும் வடிகாலமைப்பு வசதி அமைத்தல், ஏத்தாலைக் குளத்தில் பறவைகளைப் பார்வையிடும் பகுதி மற்றும் பசுமை சுற்றுலா செயற்பாடுகளை நிறுவுதல், மண்முனை வாவி மற்றும் மண்முனை பாலத்தை அழகுப்படுத்தல், ஜெட்டி படகு வசதிகளை மீளமைத்தலுடன் அதனை அண்மித்த பகுதிகளை புனர்நிருமாணம் செய்தல், மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டையின் புனர்நிருமாணம் ஆகிய விடயங்கள் தொடர்பாக விரிவாகவும் ஆராயப்பட்டது. சுற்றுலா தொடர்பான இணையத் தளம் ஒன்றை ஆரம்பிப்பதுடன், முதன்மை செயற்பாட்டுத் திட்டமாக மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட, மக்கள் அதிகம் பொழுது போக்கு இடங்களுக்கான சுகாதார வசதிகள் தொடர்பாக பிரதேச செயலாளர்கள், மட்டக்களப்பு மாநகர சபை அதிகாரிகள் தெளிவுபடுத்தியதுடன், துறை சார்ந்த திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களின் அதிகாரிகள் அது தொடர்பான அபிப்பிராயங்களை முன் வைத்தனர். இதேவேளை ஆசிய அபிவிருத்தி வங்கியின் அனுசரணையை பெற்றுக் கொள்வதற்காக முன்வைக்கப்பட்ட திட்ட முன்மொழிவுகளில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கொக்கட்டிச்சோலை ஆலயப் பகுதி சமய சுற்றுலாவிற்கான அபிவிருத்திக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள் பல தடவை அங்கு விஜயம் செய்து, அதற்கான சாத்தியக்கூறு ஆய்வுகள் நிறைவடைந்துள்ளதான தகவலை உள்ளூராட்சி உதவி ஆணையாளர் திருமதி ரிப்கா சபீன் வெளியிட்டார். இந்த நிகழ்வில் மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர்கள், மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர், மாவட்ட வன அதிகாரி, மாவட்ட மீன்பிடித் துறை அதிகாரி, கரையோர பாதுகாப்புத் திணைக்களப் பிராந்திய பொறியியலாளர், சமுத்திரவியல் பல்கலைக்கழக பணிப்பாளர், தொல்லியல் திணைக்களம், சுற்றுலா பணியகம், இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA), கிழக்கு மாகாண ஹோட்டல் சங்கம், மத்திய சுற்றாடல் அபிவிருத்தி அதிகார சபை, விவசாயத் திணைக்களம், வீதி அபிவிருத்தி அதிகார சபை (RDA), நகர அபிவிருத்தி அதிகார சபை (UDA) உள்ளிட்ட பல்வேறு திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

