மட்டக்களப்பு நகரப் பகுதியில் அண்மையில் அடுத்தடுத்து இடம்பெற்ற தீ விபத்துகளைத் தொடர்ந்து, நகரிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களிலும் மின் இணைப்புகளை மீளப் பரிசோதனை செய்வது அவசியம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று (07) அவர் வெ…
மட்டக்களப்பு நகரப் பகுதியில் அண்மையில் அடுத்தடுத்து இடம்பெற்ற தீ விபத்துகளைத் தொடர்ந்து, நகரிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களிலும் மின் இணைப்புகளை மீளப் பரிசோதனை செய்வது அவசியம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று (07) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜூலை 7ஆம் திகதி அதிகாலை மட்டக்களப்பு மத்திய வீதிக்கு அருகிலுள்ள கடைத்தொகுதியில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் நான்கு கடைகள் எரிந்து சேதமடைந்ததையும், அதற்கு முன்னர் ஜூலை 1ஆம் திகதி பார் வீதியில் அமைந்திருந்த உணவகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் பெரும் சேதம் ஏற்பட்டதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த இரண்டு தீ விபத்துகளும் மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட வர்த்தகப் பகுதிகளில் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், அவற்றுக்கான காரணம் மின் ஒழுக்கு என கூறப்படுகின்ற நிலையில், அது உண்மையாக இருந்தால் உடனடி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட அனைத்து கடை உரிமையாளர்களும் தங்களது மின் இணைப்புகளை இலங்கை மின்சார சபை அல்லது தகுதியான மின்வினைஞர் (Electrician) மூலம் முழுமையாக பரிசோதனை செய்து பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அத்துடன், மட்டக்களப்பு மாநகர சபையும் அனைத்து வர்த்தக நிலையங்களுக்கும் மின் பாதுகாப்பு பரிசோதனையை கட்டாயப்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பா. அரியநேத்திரன் வலியுறுத்தியுள்ளார்.
இவ்வாறான மீள் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதன் மூலம் மின் ஒழுக்கால் ஏற்படக்கூடிய தீ விபத்துகளைத் தடுக்க முடியும் என்றும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

