மேல் மாகாணத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதையடுத்து, அங்கிருந்து கிழக்கு மாகாணம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வருகை தருவோரின் ஊடாக டெங்கு பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு எச்சரித்துள்ளது. உயர்கல்வி, தொழில், வர்த்தகம் மற்றும் சு…

மேல் மாகாணத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதையடுத்து, அங்கிருந்து கிழக்கு மாகாணம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வருகை தருவோரின் ஊடாக டெங்கு பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு எச்சரித்துள்ளது.

உயர்கல்வி, தொழில், வர்த்தகம் மற்றும் சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக மேல் மாகாணத்திலிருந்து வருகை தரும் நபர்கள் ஊடாக நோய் பரவக்கூடும் என்பதால், பொதுமக்கள் கூடுதல் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, மேல் மாகாணத்திலிருந்து காய்ச்சலுடன் அல்லது டெங்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் வருபவர்கள், குறைந்தது 14 நாட்கள் பகல் நேரங்களில் நுளம்பு கடியிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உடல் முழுவதையும் மூடும் ஆடைகளை அணிவதுடன், நுளம்பு விரட்டி கிரீம்கள் உள்ளிட்ட பாதுகாப்பு முறைகளைப் பயன்படுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. டெங்கு பரப்பும் Aedes நுளம்புகள் பெரும்பாலும் பகல் வேளைகளிலேயே கடிப்பதால், இந்தக் காலப்பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மிகவும் அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், காய்ச்சல், கடுமையான தலைவலி, உடல்வலி, கண் பின்னால் வலி உள்ளிட்ட டெங்கு அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக அருகிலுள்ள அரச வைத்தியசாலை அல்லது சுகாதார நிலையத்தை அணுகுமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை, டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், வீடுவீடாக நுளம்பு பெருகும் இடங்களை கண்டறியும் பரிசோதனைகள் மற்றும் சுற்றுச்சூழல் சுத்தப்படுத்தும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.