கால்பந்து உலகின் உச்சகட்ட திருவிழாவான உலகக் கிண்ண 2026 தொடர், அதன் பிரம்மாண்டமான இறுதிப் பகுதியை எட்டியுள்ளது. ஐக்கிய அமெரிக்காவின் நியூ ஜெர்சியின் புகழ்பெற்ற மெட்லைஃப் மைதானத்தில் திங்கட்கிழமை (20) நள்ளிரவு 12.30 மணிக்கு நடக்கும் இந்த இறுதிப் போட்டியில், நடப்புச் சம்பியன் ஆர்ஜெ…
கால்பந்து உலகின் உச்சகட்ட திருவிழாவான உலகக் கிண்ண 2026 தொடர், அதன் பிரம்மாண்டமான இறுதிப் பகுதியை எட்டியுள்ளது. ஐக்கிய அமெரிக்காவின் நியூ ஜெர்சியின் புகழ்பெற்ற மெட்லைஃப் மைதானத்தில் திங்கட்கிழமை (20) நள்ளிரவு 12.30 மணிக்கு நடக்கும் இந்த இறுதிப் போட்டியில், நடப்புச் சம்பியன் ஆர்ஜென்டீனா மற்றும் ஐரோப்பிய சம்பியனான ஸ்பெயின் ஆகிய இரு மாபெரும் கால்பந்து சக்திகள் உலக மகுடத்திற்காக நேருக்கு நேர் மோதுகின்றன.
தென்னமெரிக்காவின் அசாத்திய வேகமும், ஐரோப்பாவின் துல்லியமான திட்டமிடலும் மோதும் இப்போட்டி பல சுவாரசியமான தனிப்பட்ட திருப்பங்களைக் கொண்டுள்ளதால் ஒட்டுமொத்த உலகமே இந்த நொடிகளை எதிர்பார்த்துக் காத்துள்ளது.
போட்டியின் சுவாரசியங்கள்:
குருவும் சீடனும்: லா மாசியாவின் இரு தலைமுறைகள்
இப்போட்டியின் மிக விசித்திரமான மற்றும் அழகான திருப்பம் என்னவென்றால் ஸ்பானியக் கழகமான பார்சிலோனாவின் புகழ்பெற்ற 'லா மாசியா' அகடமியின் ஆகச்சிறந்த பழைய மாணவரான 39 வயது லியனல் மெஸ்ஸி, அதே அகடமியின் தற்போதைய 19 வயது இளம் வாரிசான லமீன் யமாலை எதிர்கொள்கிறார்.
பல ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு தொண்டு நிறுவன புகைப்படத்தின்போது இளம் வீரரான மெஸ்ஸி, குழந்தையாக இருந்த யமாலுக்கு குளிப்பாட்டிய புகைப்படம் அண்மையில் இணையத்தில் வைரலானது. அன்று மெஸ்ஸியின் கைகளில் இருந்த அந்த குழந்தை, இன்று உலகக்கோப்பை மேடையில் அவருக்கு எதிராக சவால் விடத் தயாராகிவிட்டது. மேலும், ஆர்ஜென்டீனாவின் பயிற்சியாளர் லியனல் ஸ்கலோனிக்கு, ஒரு காலத்தில் ஸ்பெய்னில் பயிற்சியாளர் பாடநெறியில் ஆசிரியராக இருந்தவர் தான் தற்போதைய ஸ்பெய்ன் பயிற்சியாளர் லூயிஸ் டி லா புன்டே. இப்போது குருவும் சீடனும் உலகக்கோப்பைக்காக மோதுகின்றனர்.
ஆர்ஜென்டினாவின் கடினமான புனிதப் பயணம்
2022-இல் கட்டாரில் உலகக் கிண்ணத்தை வென்ற பிறகு, 39 வயதான மெஸ்ஸி மீண்டும் ஒரு இறுதிப் போட்டிக்கு வருவார் என்று பலரும் நினைக்கவில்லை. ஆனால், நடப்புத் தொடரில் மெஸ்ஸி தனது மாயாஜாலத்தை தொடர்ந்து வருகிறார். கேப் வேர்ட், எகிப்து, சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான கடுமையான போராட்டங்களுக்குப் பிறகே ஆர்ஜென்டீனா இந்த இறுதி மேடைக்கு தகுதி பெற்றுள்ளது. இது மெஸ்ஸியின் கடைசி உலகக் கிண்ண போட்டியாக அமையலாம் என்பதால், மகுடத்தைத் தக்கவைக்க அவர்கள் உயிரைக் கொடுத்து விளையாடுவார்கள்.
ஸ்பெய்னின் அசைக்க முடியாத கோட்டை
மறுபுறம் ஸ்பெயின் தொடர்ச்சியாக 37 போட்டிகளில் தோல்வியே சந்திக்காமல் அசுர பலத்துடன் களம் காண்கிறது. நடப்புத் தொடரில் எதிரணிகளுக்கு அதிக வாய்ப்புகளை தராமல், டி லா புன்டேயின் கட்டுப்பாடான பந்தை நகர்த்தும் ஆட்டமுறையால் எதிரணிகளை திணறடித்துள்ளனர். 19 வயதே ஆன இளம் புயல் யமாலின் அசாத்திய ஆட்டம் ஸ்பெய்னை இத்தொடரின் கிண்ணத்தை வெல்லக்கூடியதாக மாற்றியுள்ளது.
போட்டியை தீர்மானிக்கப் போகும் வானிலை, ஆடுகளம்
நியூ ஜெர்சி மைதானத்தின் புற்தரை இத்தொடரில் பந்தை வேகமாக நகர்த்தும் ஸ்பெய்னுக்கு சற்று சவாலாகவே இருந்துள்ளது. இது ஸ்பெய்னின் வேகத்தைக் கட்டுப்படுத்தி, ஆர்ஜென்டீனா விரும்பும் உணர்ச்சிப்பூர்வமான ஆட்டத்திற்கு வழிவகுக்கலாம். மேலும், 30 பாகை செல்சியஸ் வெப்பம், கடுமையான ஈரப்பதம் மற்றும் கனடாவின் காட்டுத்தீ புகை மூட்டம் போன்ற சவால்களுக்கு மத்தியில் 80,000-க்கும் மேற்பட்ட ரசிகர்களின் முன்னிலையில் இந்த வரலாற்றுச் சமர் அரங்கேறப்போகிறது.
இத்தாலி மற்றும் பிரேசிலுக்குப் பிறகு உலகக் கிண்ணத்தை தக்க வைத்துக் கொள்ளும் மூன்றாவது அணியாக ஆர்ஜென்டீனா மாறுமா, அல்லது ஸ்பெய்ன் தனது இரண்டாவது உலகக் கிண்ணத்தை முத்தமிடுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

