தலவாக்கலை புகையிரத நிலையத்தில் நீண்டகாலமாக பயன்பாடின்றி காணப்பட்ட பாரம்பரிய தொடருந்து சரக்கு கிரேனை, அங்குள்ள தொடருந்து ஊழியர்கள் தங்களது தொழில்நுட்ப திறமையை பயன்படுத்தி மீண்டும் இயங்கக்கூடிய வகையில் சீரமைத்துள்ளனர். டித்வா புயலால் பாதிக்கப்பட்ட வீதிகளை புனரமைப்பதற்காக பயன்படுத்…

தலவாக்கலை புகையிரத நிலையத்தில் நீண்டகாலமாக பயன்பாடின்றி காணப்பட்ட பாரம்பரிய தொடருந்து சரக்கு கிரேனை, அங்குள்ள தொடருந்து ஊழியர்கள் தங்களது தொழில்நுட்ப திறமையை பயன்படுத்தி மீண்டும் இயங்கக்கூடிய வகையில் சீரமைத்துள்ளனர்.

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட வீதிகளை புனரமைப்பதற்காக பயன்படுத்தப்படும் கொங்கிறீட் கட்டைகள், தொடருந்து சிலிப்பர்கள் உள்ளிட்ட கனரக பொருட்களை ஏற்றுவதற்கும் இறக்குவதற்கும் இந்த கிரேன் பயன்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரேன் பயன்பாடு இதன் மூலம், பெக்கோ இயந்திரங்கள், நவீன ஹைட்ராலிக் கிரேன்கள் மற்றும் அவற்றை இயக்குவதற்கான எரிபொருள், வாடகை, போக்குவரத்து மற்றும் தொழிலாளர் செலவுகள் போன்றவற்றில் தொடருந்து திணைக்களத்திற்கு பல இலட்சம் ரூபா சேமிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், அனைத்து தொடருந்து நிலையங்களுக்கும் பாரிய நவீன இயந்திரங்களை கொண்டு செல்வது நடைமுறையில் சிரமமானதாக இருக்கும் நிலையில், அங்கு ஏற்கனவே உள்ள பழைய வசதிகளை புதுப்பித்து பயன்படுத்துவது மிகவும் பயனுள்ள தீர்வாக அமைந்துள்ளது.

இந்த முயற்சி, அரச சொத்துக்களை பாதுகாத்து அவற்றை மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டுவரும் சிறந்த முன்னுதாரணமாக மட்டுமல்லாமல், இருப்பதை திறமையாக பயன்படுத்தினால் புதிய முதலீடுகளை குறைக்க முடியும் என்ற செய்தியையும் சமூகத்திற்கு எடுத்துக்காட்டுகிறது.

குறிப்பாக, எரிபொருள் இறக்குமதியை அதிகம் சார்ந்துள்ள இலங்கை போன்ற அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கு இவ்வாறான பழைய இயந்திரங்களை நவீன தேவைகளுக்கு ஏற்ப மறுசீரமைத்து பயன்படுத்துவது பொருளாதார ரீதியாகவும் சுற்றுச்சூழல் ரீதியாகவும் பெரும் நன்மைகளை வழங்கும் என நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.தொடருந்து நிலைய ஊழியர்கள் தலவாக்கலை தொடருந்து நிலைய ஊழியர்களின் இந்த முன்மாதிரியான செயல், வளங்களை வீணாக்காமல் பாதுகாத்து பயன்படுத்தும் பண்பையும், குறைந்த செலவில் அதிக பயனைப் பெறும் அரச நிர்வாகத்தின் சிறந்த எடுத்துக்காட்டாகவும் பார்க்கப்படுகின்றது.இந்த விடயம் தொடர்பில் தொடருந்து திணைக்களத்தின் அதிகாரியொருவர் கருத்து தெரிவிக்கையில்,

ஆரம்ப காலத்தில் குதிரைகள், பாரிய இயந்திரங்கள் மற்றும் வாகனங்களை இறக்குவதற்காக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன.ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள நவீன வசதிகள் காரணமாக இவற்றின் பயன்பாடு கைவிடப்பட்டு காணப்பட்டன.

எனினும் தலவாக்கலை உள்ள இந்த கிரேன் இயந்திரத்தினை மீண்டும் செயற்படுத்த தொழிநுட்பவியலாளர் முயற்சி எடுத்திருப்பது மிகவும் பாராட்டக்கூடிய விடயமே.

காரணம் ஒரு கொங்கிறீட் சிலிப்பர் கட்டையினை ஏற்றுவதற்கு சுமார் 8 பேர் தேவை. ஆனால் இன்று ஐந்து சிலிப்பர்கட்டைகளை எந்தவித சிரமமுமின்றி மிகவும் இலவாக ஏற்றுவதற்கு வசதிகள் இதன் மூலம் கிடைக்கின்றன.

இதனூடாக ஐந்து டொன் எடை கொண்ட பாரமான பொருட்களை கூட இலகுவாக ஏற்ற முடியும் என குறிப்பிட்டுள்ளார்.