வங்காள விரிகுடாவில் மியான்மர் கடற்கரைக்கு அருகில் ரோஹிங்கியா அகதிகளை ஏற்றிச் சென்ற இரண்டு படகுகள் கவிழ்ந்ததில், 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் அல்லது காணாமல் போயிருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. சர்வதேச இடம்பெயர்வு அமைப்பு (IOM) மற்றும் ஐக்கிய நாடுகளின் அகதிகள…

வங்காள விரிகுடாவில் மியான்மர் கடற்கரைக்கு அருகில் ரோஹிங்கியா அகதிகளை ஏற்றிச் சென்ற இரண்டு படகுகள் கவிழ்ந்ததில், 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் அல்லது காணாமல் போயிருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

சர்வதேச இடம்பெயர்வு அமைப்பு (IOM) மற்றும் ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஆணையம் (UNHCR) இன்று(16.07.2026) வெளியிட்ட அறிக்கையின்படி, இந்தத் துயரச் சம்பவம் ஜூன் மாத இறுதியில் அல்லது ஜூலை மாத தொடக்கத்தில் நிகழ்ந்துள்ளது.

காணாமல் போன 500 அகதிகள் இந்தக் கடல்வழிப் பாதையில், சமீபகால வரலாற்றில் இதுவே மிக மோசமான மற்றும் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்திய கடல்சார் பேரழிவு எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிடைத்த தகவல்களின்படி, அந்த இரண்டு படகுகளும் ஜூன் மாத இறுதியில் மியான்மரின் மேற்கு ராகைன் மாநிலத்திலிருந்து புறப்பட்டுள்ளது. இதன்போது, அந்த படகு சுமார் 250 பேரை ஏற்றிச் சென்ற முதல் படகு, புறப்பட்ட சிறிது நேரத்திலேயே மற்ற படகுகளுடனான தொடர்பை இழந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து சுமார் 280 பேரை ஏற்றிச் சென்ற இரண்டாவது படகு, ஜூலை 8 ஆம் திகதி அல்லது அதற்குச் சற்று முன்னதாக மியான்மரின் அயேயார்வாடி ஆற்றுக் கடற்கரைக்கு அப்பால் கவிழ்ந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

வழக்கமான படகுப் பயணக் காலத்திற்கு வெளியேயும், கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கிற்கு மத்தியிலும் மேற்கொள்ளப்பட்ட இந்த அபாயகரமான பயணம், ஆபத்தை மேலும் அதிகரித்துள்ளது.

உயிரிழப்பை உறுதிப்படுத்திய ஜக்கிய நாடுகள் சபை அதிகாரப்பூர்வ இறப்பு எண்ணிக்கை இன்னும் முழுமையாக உறுதிப்படுத்தப்படவில்லை, ஆனால் உயிரிழப்பு மிக அதிகமாக இருக்கலாம் என்று ஐக்கிய நாடுகள் சபை கவலை வெளியிட்டுள்ளது.

பயணிகளில் பெரும்பான்மையானவர்கள் மியான்மரில் குடியுரிமையற்ற முஸ்லிம் சிறுபான்மையினரான ரோஹிங்கியர்கள் ஆவர். அவர்களில் சிலர், வங்கதேசத்தின் காக்ஸ் பஜாரில் உள்ள நெரிசல் மிகுந்த அகதிகள் முகாம்களில் இருந்து ரகைன் மாநிலத்திற்குத் திரும்பி, பின்னர் இந்த அபாயகரமான பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.

மியான்மரின் ரகைன் மாநிலத்தில் உள்ள ரோஹிங்கிய மக்கள், பல தசாப்தங்களாக அரசின் ஆதரவுடன் கூடிய துன்புறுத்தலுக்கும் கடுமையான கட்டுப்பாடுகளுக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

இதனை அமெரிக்கா இனப்படுகொலை என்று வகைப்படுத்தியுள்ளது. 2017-ல் மியான்மர் இராணுவம் மேற்கொண்ட ஒடுக்குமுறைக்குப் பின்னர், பத்து லட்சத்திற்கும் அதிகமான ரோஹிங்கியர்கள் வங்கதேசத்திற்குத் தப்பிச் சென்றுள்ளனர்.

அதே நேரத்தில் மேலும் 630,000 பேர் ரகைன் மாநிலத்தில் மிகவும் மோசமான நிலையில் வாழ்கின்றனர். வங்காளதேசத்தில் உள்ள முகாம்களில் நிலவும் குறைந்த வாய்ப்புகளும், காக்ஸ் பஜார் முகாம்களில் சமீபத்தில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் குழந்தைகள் உட்பட ஏராளமானோர் உயிரிழந்துள்ளதுடன், அகதிகளை இந்த அபாயகரமான பயணத்திற்கு காரணமாக அமைந்துள்ளது.

விடுக்கப்பட்ட அவசரக் கோரிக்கை

இந்த சமீபத்திய துயரச் சம்பவத்திற்கு முன்பு, 2026-ஆம் ஆண்டில் இதுவரை சுமார் 300 பேர் உயிரிழந்துள்ளனர் அல்லது காணாமல் போயுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர் ஆணையரின் கூற்றுப்படி,

2025-ஆம் ஆண்டில் சுமார் 6,500 பேர் அந்தப் பாதையைக் கடக்க முயன்றுள்ளனர், அவர்களில் கிட்டத்தட்ட 900 பேர் உயிரிழந்துள்ளனர் அல்லது காணாமல் போயுள்ளனர்.

இதுவே இதுவரை இல்லாத அளவுக்கு மிக மோசமான ஆண்டாகப் பதிவாகியுள்ளது. தொடரும் மோதலும், பாதுகாப்பான மாற்று வழிகள் இல்லாததும், கடலில் பெண்கள், குழந்தைகள் மற்றும் பச்சிளங்குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கான ரோஹிங்கியா மக்களின் உயிர்களைப் பறிக்க வழிவகுக்கிறது.

சர்வதேச இடம்பெயர்வு அமைப்பும், ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர் ஆணையரும் (UNHCR), தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தவும், அகதிகளுக்குப் பாதுகாப்பும் கவனிப்பும் வழங்கவும், மனிதக் கடத்தல் வலையமைப்புகளை ஒடுக்கவும் பிராந்திய மற்றும் சர்வதேச சமூகத்திடம் அவசரமாக வேண்டுகோள் விடுத்துள்ளன.