நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர விரைவில் கைது செய்யப்படும் அபாயம் இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். தயாசிறி ஜயசேகரவைக் குறிவைத்து அரசாங்கம் ஒரு அரசியல் வேட்டையை நடத்தி வருவதாகவும், அவரைக் கைது செய்வதற்கான தேவையான பின்னணிகள் தற்போது உருவாக்கப்ப…
நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர விரைவில் கைது செய்யப்படும் அபாயம் இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
தயாசிறி ஜயசேகரவைக் குறிவைத்து அரசாங்கம் ஒரு அரசியல் வேட்டையை நடத்தி வருவதாகவும், அவரைக் கைது செய்வதற்கான தேவையான பின்னணிகள் தற்போது உருவாக்கப்பட்டு வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பில் இன்று(10.07.2026) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மருத்துவ செலவில் மோசடி
தனது சமூக ஊடக வலைப்பின்னல்களையும் பல்வேறு தரப்புகளையும் பயன்படுத்தி, தயாசிறி ஜயசேகரவுக்கு எதிராக பொதுமக்கள் அபிப்பிராயம் ஒன்றை உருவாக்க அரசாங்கம் முயற்சிப்பதாகவும், இது மிகவும் வெட்கக்கேடான செயல் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் விமர்சித்துள்ளார். 2019ஆம் ஆண்டில், தயாசிறி ஜயசேகர மருத்துவ சிகிச்சைக்காக ஐந்து இலட்சம் ரூபாய் உதவித்தொகையைப் பெற்றதாகவும், அவர் தனது சிகிச்சைக்காக 868,000 ரூபாய் செலவழித்ததாகவும், உதவித்தொகை வழங்கப்பட்டபோது சமர்ப்பிக்கப்பட்ட ரசீதுகளில் பிழைகள் இருப்பதாகக் கூறி அரசாங்கம் அவரைக் கைது செய்யத் தயாராகி வருவதாகவும் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார்.
“கருணைக்கொடை என்பது நிறைவேற்று ஜனாதிபதியின் விருப்பத்தின் பேரில் வழங்கப்படும் ஒரு நன்கொடையாகும். அதற்காக ரசீதுகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை.
இத்தகைய சூழ்நிலையில், ரசீதுகளில் சிக்கல்கள் இருப்பதாகக் கூறி அவரைக் கைது செய்ய முயற்சிப்பது தெளிவான அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையாகும் சஜித் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னாள் அரசியல்வாதிகள் மீதான பழிவாங்கல் நாட்டில் நிலவும் கடுமையான பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, அரசாங்கம் இதுபோன்ற அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது வருந்தத்தக்கது என்றும் அவர் தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார். சிறைச்சாலை கட்டமைப்பை நிர்வகித்தல், சரிந்துவரும் பொருளாதாரத்திற்குப் புத்துயிர் அளித்தல், வறுமை மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாட்டை ஒழித்தல், வேகமாகப் பரவிவரும் டெங்கு நோயை எதிர்த்துப் போராடுதல் போன்ற அத்தியாவசியப் பணிகளைப் புறக்கணித்துவிட்டு, அரசாங்கம் இதுபோன்ற அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக சஜித் குற்றம் சாட்டியுள்ளார்.
தயாசிறி ஜயசேகரவின் உரிமைகளுக்காகத் தானும் எதிர்க்கட்சியினரும் எந்த நேரத்திலும் துணை நிற்போம் என்றும் சஜித் பிரேமதாச தொடர்ந்தும் வலியுறுத்தியுள்ளார்.

