ஹட்டன் நகரில் வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றில் முன்பகுதி பாதுகாப்புக் கவசத்திற்குள் பாம்பு ஒன்று புகுந்துள்ள நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று(13.07.2026) அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பு கவசத்திற்குள்…
ஹட்டன் நகரில் வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றில் முன்பகுதி பாதுகாப்புக் கவசத்திற்குள் பாம்பு ஒன்று புகுந்துள்ள நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இன்று(13.07.2026) அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாதுகாப்பு கவசத்திற்குள் புகுந்த பாம்பு இன்று(13) சுமாராக 3 மணியளவில், ஹட்டன் நகரில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றிற்கு பொருட்கள் வாங்கச் சென்றிருந்த மோட்டார் சைக்கிளின் உரிமையாளர், தனது வாகனத்தை வீதியோரமாக நிறுத்திவிட்டு சென்றுள்ளார்.
இதன்போது, மோட்டார் சைக்கிளின் முன்பகுதி பாதுகாப்புக் கவசத்திற்குள் பாம்பு ஒன்று இருந்துள்ளது.
இதனையடுத்து, அருகில் சென்ற ஒருவர் அந்தப் பாம்பு கவசத்திற்குள் இருந்து தலையை வெளியே நீட்டி எட்டிப்பார்த்ததை கண்டு அதிர்ச்சியடைந்து, அங்கிருந்தவர்களுக்கு தகவல் வழங்கியுள்ளார்.
தகவல் அறிந்ததும் அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் சம்பவ இடத்திற்கு திரண்டு வந்ததால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான நிலை ஏற்பட்டுள்ளது.
பாம்பு பாதுகாப்பாக மீட்பு
அதன் பின்னர், அங்கிருந்த சிலர் மிகவும் அவதானமாக செயல்பட்டு, மோட்டார் சைக்கிளின் கவசப் பகுதியில் இருந்த பாம்பை தடியின் ஊடாக பாம்பை பாதுகாப்பாக வெளியே எடுத்துள்ளனர்.
பாம்பிற்கு எந்தவித சேதமும் ஏற்படாத வகையில் ஹட்டன் தொடருந்து நிலையப் பாதைக்கு அண்மையிலுள்ள புதர்ப்பகுதியில் விடப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தில் யாருக்கும் எந்தவித காயங்களோ அல்லது சேதங்களோ ஏற்படவில்லை. இருப்பினும், நகர்ப்புறங்களிலும் வாகனங்களுக்குள் பாம்புகள் புகும் சம்பவங்கள் அவ்வப்போது பதிவாகி வருவதால், நீண்ட நேரம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்களை இயக்குவதற்கு முன் அவற்றை நன்கு பரிசோதித்துக் கொள்வது அவசியம் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

