முகநூல் ஊடாக வாகனங்களை விற்பனை செய்வதாக விளம்பரம் செய்து, பின்னர் அவற்றை மீண்டும் கொள்ளையடிக்கும் திட்டமிட்ட மோசடியுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். யக்கல பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள…

முகநூல் ஊடாக வாகனங்களை விற்பனை செய்வதாக விளம்பரம் செய்து, பின்னர் அவற்றை மீண்டும் கொள்ளையடிக்கும் திட்டமிட்ட மோசடியுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

யக்கல பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

ரூபாய் 40 இலட்சம் செலுத்தி கொள்வனவு செய்யப்பட்ட வேன் வண்டியொன்றை ஆயுதமேந்திய குழுவினர் மிரட்டி கொள்ளையடித்ததாக ஜூலை முதலாம் திகதி பொலிஸ் மா அதிபர் நிவாரணப் பிரிவில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளில், பெலும்மஹர – முந்துங்கொட பகுதியில் அமைந்துள்ள வாகன விற்பனை நிலையத்தின் உரிமையாளர் உள்ளிட்ட சுமார் 10 பேர் இந்த மோசடியுடன் தொடர்புபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

விசாரணைகளின்படி, சந்தேகநபர்கள் முகநூல் மூலம் வாகனங்களை விற்பனை செய்வதாக விளம்பரம் செய்து, விற்பனை செய்யப்பட்ட வாகனங்களை பின்னர் பின்தொடர்ந்து சென்று ஆயுத முனையில் கொள்ளையடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் வாகன விற்பனை நிலைய உரிமையாளர் உள்ளிட்ட சிலர் தற்போது தலைமறைவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிட்டம்புவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கலகெடிஹேன பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது, சந்தேகநபரின் வீட்டிலிருந்து இரண்டு வாள்கள், இரண்டு பிஸ்டல் மெகசின்கள், மூன்று தோட்டாக்கள் மற்றும் ஜீப் வண்டியொன்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இதே முறையில் இடம்பெற்ற மேலும் இரண்டு கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பிலும் சந்தேகநபர்களுக்கு எதிராக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நேற்று (14) கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து, நாளை (16) வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.