பிரித்தானியாவின் முன்னாள் பெண் அமைச்சரும், ரிஃபார்ம் யூகே கட்சியின் முக்கிய நிர்வாகியுமான அன் விடிகோம்ப் (வயது 78) கொலையின் பின்னணியில் அரசியல் காரணங்கள் எதுவும் இருப்பதற்கான ஆதாரம் இதுவரை கிடைக்கவில்லை என்று அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். தென்மேற்கு பிரித்தானியாவின் கிராம…
பிரித்தானியாவின் முன்னாள் பெண் அமைச்சரும், ரிஃபார்ம் யூகே கட்சியின் முக்கிய நிர்வாகியுமான அன் விடிகோம்ப் (வயது 78) கொலையின் பின்னணியில் அரசியல் காரணங்கள் எதுவும் இருப்பதற்கான ஆதாரம் இதுவரை கிடைக்கவில்லை என்று அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தென்மேற்கு பிரித்தானியாவின் கிராமப்புற பகுதியில் உள்ள அவரது இல்லத்தில், கடந்த வியாழக்கிழமை அன் விடிகோம்ப் படுகாயங்களுடன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
இந்த கொடூரக் கொலை தொடர்பாக வடக்கு பிரித்தானியாவின் ரோதர்ஹாம் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய பிரித்தானிய இளைஞர் ஒருவரை பொலிஸார் சனிக்கிழமை இரவு கைது செய்துள்ளனர்.
இந்த வழக்கு குறித்து டெவோன் மற்றும் கார்ன்வால் பகுதியின் உதவி தலைமை பொலிஸ் அதிகாரி மேட் லாங்மேன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தற்போதைய விசாரணை நிலவரப்படி, இந்த சம்பவத்திற்கும் பயங்கரவாதத்திற்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை.பல்வேறு கோணங்கள் மேலும், இந்த கொலையில் வேறு யாருக்கும் தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை.
புலனாய்வாளர்கள் பல்வேறு கோணங்களில் விசாரித்து வந்தாலும், இது அரசியல் தூண்டுதலால் நடத்தப்பட்ட கொலை என்பதற்கான எந்தவொரு முகாந்திரமும் இதுவரை கிடைக்கவில்லை" என்று விளக்கமளித்துள்ளார். முன்னதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மற்றொரு நபர், விசாரணக்குப் பின் எவ்வித குற்றச்சாட்டுகளும் இன்றி விடுவிக்கப்பட்டார்.
தீவிர சமூகக் கொள்கை பற்றாளரான அன் விடிகோம்ப், 1990களில் ஜான் மேஜரின் கன்சர்வேடிவ் கட்சி அரசாங்கத்தில் இளநிலை அமைச்சராகப் பணியாற்றியவர்.
2010இல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகிய அவர், பின்னர் நைஜல் ஃபரேஜின் ரிஃபார்ம் யூகே கட்சியில் இணைந்து அதன் குடியேற்றம் மற்றும் நீதித்துறைக்கான செய்தித் தொடர்பாளராகச் செயல்பட்டு வந்தார்.
பிரித்தானியாவில் கடந்த பத்தாண்டுகளில் ஜோ காக்ஸ் (2016) மற்றும் டேவிட் அமேஸ் (2021) ஆகிய இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் மற்றும் தீவிரவாதக் காரணங்களால் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் அன் விடிகோம்பின் இந்த மரணம் பிரித்தானியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

