முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவின் சர்ச்சைக்குரிய மரணம், துப்பாக்கி தவறுதலாக வெடித்ததால் ஏற்பட்ட விபத்தாக இருக்கலாம் என அவரது நெருங்கியவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்த இறுதி நீதிமருத்துவ அறிக்கை விரைவில் வெளியாக உள்ளது.துயரச் சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை காலை, தனத…
முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவின் சர்ச்சைக்குரிய மரணம், துப்பாக்கி தவறுதலாக வெடித்ததால் ஏற்பட்ட விபத்தாக இருக்கலாம் என அவரது நெருங்கியவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்த இறுதி நீதிமருத்துவ அறிக்கை விரைவில் வெளியாக உள்ளது.துயரச் சம்பவம்
கடந்த வெள்ளிக்கிழமை காலை, தனது மனைவி பிரியங்கி மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியுடன் வழக்கமான காலை நடைப்பயிற்சிக்குச் செல்லத் தயாராகிக் கொண்டிருந்தபோது, 63 வயதான ஓய்வுபெற்ற மூத்த அதிகாரி தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டார் என்ற தகவல் வெளியானது.
சம்பவம் நிகழ்ந்தபோது விளையாட்டு உடையும் வெள்ளை நிற டி-ஷர்ட்டும் அணிந்திருந்த அவர், மனைவி காலணியை அணிந்து முடிக்கும் வரை வீட்டின் முன்புறத்தில் அமர்ந்திருந்தார்.
அப்போது பாதுகாப்பு அதிகாரியிடம் இருந்த நவீன ரக ரிவால்வரை பார்த்து அதை பரிசோதிக்க விரும்பியதாகவும், அதில் குண்டுகள் இல்லையா என்று நகைச்சுவையாகக் கேட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து பாதுகாப்பு அதிகாரி துப்பாக்கியின் மகசினை அகற்றி அவரிடம் கொடுத்ததாகவும், பின்னர் தண்ணீர் எடுக்க சமையலறைக்குச் சென்றபோது திடீரென ஒரு துப்பாக்கிச் சத்தம் கேட்டதாகவும் கூறப்படுகிறது.உடற்கூறு பரிசோதனை
மார்பில் குண்டு பாய்ந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த முன்னாள் பொலிஸ் மா அதிபர் உடனடியாக முல்லேரியா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாலும், அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான உடற்கூறு பரிசோதனை அதே நாளில் நடத்தப்பட்டு, மேலதிக ஆய்வுகளுக்காக மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன.
எதிர்வரும் புதன்கிழமை நடைபெறவுள்ள நீதிமன்ற விசாரணையில் மரணத்திற்கான துல்லியமான காரணம் அடங்கிய நீதிமருத்துவ அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது.
ஆரம்பத்தில் இது பாதுகாப்பு அதிகாரியின் துப்பாக்கியைப் பயன்படுத்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்திருந்தாலும், பின்னர் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் அந்தக் குறிப்பு நீக்கப்பட்டு, துப்பாக்கிச் சூட்டுக் காயத்தால் உயிரிழந்தார் என்று மட்டும் குறிப்பிடப்பட்டது.
தற்போது இரண்டு பொலிஸ் விசாரணைக் குழுக்கள் இந்த மரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றன.
வீட்டின் சிசிடிவி காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.ஆரம்பகட்ட விசாரணைகளில், வீட்டுக்குள் யாரும் வலுக்கட்டாயமாக நுழைந்ததற்கான சான்றுகள் எதுவும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமருத்துவ நிபுணர்களின் ஆரம்பக் கணிப்பின்படி, பொதுவாக துப்பாக்கி மூலம் நிகழும் தற்கொலைச் சம்பவங்களில் தலையில் காயம் ஏற்படுவது வழக்கம். சந்தன விக்ரமரத்னவின் மரணம்ஆனால் இச்சம்பவத்தில் மார்பில் குண்டு பாய்ந்திருப்பது விசாரணையில் முக்கிய கவனத்துக்கு வந்துள்ளது.
எனினும் இதன் அடிப்படையில் மட்டும் முடிவுக்கு வர முடியாது என்றும், முழுமையான நீதிமருத்துவ மற்றும் பாலிஸ்டிக் (Ballistic) ஆய்வு அறிக்கைகளின் பின்னரே இறுதி முடிவு எடுக்க முடியும் என்றும் நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். இதற்கிடையில், சந்தன விக்ரமரத்ன தவறான முடிவெடுத்துகொண்டார் என்ற கருத்தை அவரது குடும்பத்தினர் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.
மரணத்திற்கு முந்தைய நாட்களிலும் அவர் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருந்ததாக அவர்கள் கூறுகின்றனர்.கண் பரிசோதனைக்கான நேரத்தை முன்பதிவு செய்திருந்ததோடு, நண்பரைச் சந்திக்கவும், ஜூலை 31ஆம் திகதி நடைபெறவிருந்த பிறந்தநாள் விழாவில் பங்கேற்கவும் திட்டமிட்டிருந்தார்.சம்பவம் நிகழ்வதற்கு சில நிமிடங்களுக்கு முன்புகூட தனது நண்பர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் "காலை வணக்கம்" செய்தி அனுப்பியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், தனது இளைய மகனின் குடும்பப் பிரச்சினையால் அவர் மனஅழுத்தத்தில் இருந்ததாக சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்களையும் குடும்பத்தினர் மறுத்துள்ளனர்.
மகன் கைது செய்யப்பட்டதாக அல்லது விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக வெளியான தகவல்களும் முற்றிலும் பொய்யானவை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.அதிர்ச்சியூட்டும் தகவல்கள்
ஏழு மாத வயதுடைய பேத்தியை மிகவும் நேசித்த அவர், அவளை பள்ளிக்குச் செல்லும் நாளைக் காண ஆவலுடன் இருந்ததாகவும், கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய நம்பிக்கைகள் குறித்த நூல் ஒன்றை எழுதி வந்ததாகவும், அதன் வரைவை நண்பர்களிடம் கருத்துக்காக அனுப்பியிருந்ததாகவும் குடும்பத்தினர் கூறுகின்றனர்.
இதனிடையே, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் அவர் அளித்த சாட்சியத்துடன் இந்த மரணத்தை தொடர்புபடுத்தி ஊகங்கள் வெளியானாலும், மூத்த பொலிஸ் அதிகாரிகள் அவற்றை நிராகரித்துள்ளனர்.அந்த வாக்குமூலம் ஏற்கனவே நீதிமன்றத்தில் பதிவாகியிருந்ததுடன், அதில் புதிய அல்லது அதிர்ச்சியூட்டும் தகவல்கள் எதுவும் இல்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். சந்தன விக்ரமரத்ன 2020 நவம்பர் 25ஆம் திகதி இலங்கையின் 35ஆவது பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டார். மூன்று முறை சேவை நீட்டிப்பு பெற்ற அவர், 2023ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.
2019ஆம் ஆண்டு முதல் நீண்டகாலம் பதில் பொலிஸ் மா அதிபராகவும் பணியாற்றிய அவர், இலங்கை வரலாற்றில் மிக நீண்ட காலம் பதில் பொலிஸ் மா அதிபர் பதவியை வகித்த அதிகாரியாகவும் பதிவாகியுள்ளார்.

