நெடுந்தீவு, அனலைதீவு மற்றும் நயினாதீவு ஆகியவற்றை ‘பசுமை எரிசக்தித் தீவுகளாக’ (Green Energy Islands) மேம்படுத்துவதற்கும், ஊக்குவிப்பதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு வலுசக்தி அமைச்சின் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார். இந்தத் தீவுகளில் தற்போது நட…
நெடுந்தீவு, அனலைதீவு மற்றும் நயினாதீவு ஆகியவற்றை ‘பசுமை எரிசக்தித் தீவுகளாக’ (Green Energy Islands) மேம்படுத்துவதற்கும், ஊக்குவிப்பதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு வலுசக்தி அமைச்சின் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார்.
இந்தத் தீவுகளில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் கலப்பு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முறைமை (HRES) திட்டத்தின் முன்னேற்றத்தை ஆய்வு செய்த பின்னரே ஜனாதிபதி இந்தப் பணிப்புரையை வழங்கினார்.
வலுசக்தி அமைச்சின் 2026 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்ட ஒதுக்கீட்டின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் 2027 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்திற்கு முந்தைய கலந்துரையாடல், ஜனாதிபதி செயலகத்தில் இன்று (15) காலை ஜனாதிபதியின் தலைமையில் இடம்பெற்றது.
இந்தக் கூட்டத்தில், 2026 ஆம் ஆண்டு ஒதுக்கீட்டின் கீழ் மேற்கொள்ளப்படும் திட்டங்கள், இந்த ஆண்டு நிறைவு செய்யப்பட வேண்டிய திட்டங்கள் மற்றும் 2027 ஆம் ஆண்டுக்கான நிதித் தேவைகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. மேலும், பொருளாதார நெருக்கடியால் இடைநடுவில் நிறுத்தப்பட்ட ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனத்தின் (JICA) உதவி பெற்ற எரிசக்தித் திட்டங்களை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
கெரவலப்பிட்டியவிலிருந்து கொழும்பு துறைமுகம் வரையிலான இரண்டாவது 220 kV நிலத்தடி மின்சார பரிமாற்றக் கேபிள் முறைமை, சம்பூர்-கப்பல்துறை மின்சார பரிமாற்றத் திட்டம், புதிய ஹபரணை-கப்பல்துறை மின்சார பரிமாற்றத் திட்டம், Padukka 220 kV கட்ட மின்நிலையத்தில் STATCOM முறைமையைப் பொருத்துதல் மற்றும் கூரை சூரிய சக்தி மின்சார ஒருங்கிணைப்புத் திட்டம் உள்ளிட்ட முக்கிய திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் ஜனாதிபதி ஆய்வு செய்தார்.
இதற்கு மேலதிகமாக, பெட்ரோலியத் துறையில் நடைமுறைப்படுத்தப்படும் 14 முக்கிய திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் எதிர்கால நிதித் தேவைகளையும் ஜனாதிபதி ஆய்வு செய்தார். அவற்றுள் கொலன்னாவை எரிபொருள் களஞ்சிய வளாகத்தில் ஆறு புதிய களஞ்சியத் தாங்கிகளின் கட்டுமானம், முத்துராஜவெல எரிபொருள் களஞ்சிய வளாகத்தில் இரண்டு புதிய தாங்கிகளின் கட்டுமானம் மற்றும் எரிபொருள் களஞ்சிய வசதிகளை விரிவுபடுத்துதல், கொலன்னாவை களஞ்சிய வளாகத்தில் தாங்கிகளைப் புனரமைத்தல் மற்றும் ஏழாவது வலயத்தில் எரிபொருள் நிரப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்றவை உள்ளடங்குகின்றன என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

