முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறித்துப் பாராளுமன்றத்தில் குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர்கள், அவரை நேரில் கண்டவுடன் கீழே வளைந்து குனிந்து வணங்குகின்றனர் என புதிய ஜனநாயக முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சமர சம்பத் விமர்சித்துள்ளார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை(08) அன்று நடைபெற…
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறித்துப் பாராளுமன்றத்தில் குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர்கள், அவரை நேரில் கண்டவுடன் கீழே வளைந்து குனிந்து வணங்குகின்றனர் என புதிய ஜனநாயக முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சமர சம்பத் விமர்சித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை(08) அன்று நடைபெற்ற கட்டளைகள் மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது: “பிரதி அமைச்சர் வட்டகல, ‘முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஜுலம்பிட்டிய அமரேவுடன் தொடர்பில் இருந்தார்’ என்று குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். ஆனால், அதே வட்டகல சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற நிகழ்வொன்றில், மஹிந்த ராஜபக்ஷவை கண்டவுடன் குனிந்து வணங்கியதை நான் பார்த்தேன்.
பாராளுமன்றத்தில் வந்து அவருக்கு எதிராகக் குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர்கள், அவரை நேரில் காணும்போதும் அதே நிலைப்பாட்டில் இருக்க வேண்டும். முதுகெலும்பு இருக்குமானால், பாராளுமன்றத்தில் பேசுவதைப்போலவே அவரை நேரில் சந்திக்கும்போதும் நடந்துகொள்ளுங்கள்.
இப்போது மஹிந்த ராஜபக்ஷவை விமர்சிப்பதில் எந்தப் பிரயோஜனமும் இல்லை; அவர் அரசியலிலிருந்து ஓய்வுபெற்று வீட்டில் இருக்கின்றார். உங்களுக்குத் துணிச்சல் இருந்தால், அவரின் மகன் பாராளுமன்றத்திற்கு வரும்போது, அவருக்கு நேராகக் குற்றச்சாட்டுகளை முன்வையுங்கள்” எனச் சவால் விடுத்தார்.

