மேல் மாகாணத்தில் டெங்கு நுளம்புகளின் குடம்பிகளின் அடர்த்தி குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதால், அடுத்த இரண்டு வாரங்கள் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்துவதில் மிகவும் முக்கியமானதும் அபாயகரமானதுமான காலப்பகுதியாக இருக்கும் என டெங்கு முகாமைத்துவம் தொடர்பான விசேட நிபுணர் குழுவின் உற…
மேல் மாகாணத்தில் டெங்கு நுளம்புகளின் குடம்பிகளின் அடர்த்தி குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதால், அடுத்த இரண்டு வாரங்கள் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்துவதில் மிகவும் முக்கியமானதும் அபாயகரமானதுமான காலப்பகுதியாக இருக்கும் என டெங்கு முகாமைத்துவம் தொடர்பான விசேட நிபுணர் குழுவின் உறுப்பினர் விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்கிரம எச்சரிக்கை விடுத்துள்ளார்.
'தெரண பிக் ஃபோகஸ்' (BIG FOCUS) நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர், தற்போதைய டெங்கு பரவல் நிலை 2017ஆம் ஆண்டு பதிவான மோசமான டெங்கு பரவலையும் விட தீவிரமடையக்கூடும் என சுட்டிக்காட்டினார்.
டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதால், மேல் மாகாண வைத்தியசாலைகளின் கொள்ளளவு ஏற்கனவே மீறப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். சில வைத்தியசாலைகளில் ஒரே படுக்கையில் இரண்டு அல்லது மூன்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நீலிகா மளவிகே, டெங்கு பரவலுக்கான முன்னறிகுறிகள் கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களிலேயே தென்பட்டதாக தெரிவித்தார்.
தென்மேற்குப் பருவமழைக் காலமான மே, ஜூன், ஜூலை மாதங்களிலும், வடகிழக்குப் பருவமழைக் காலமான நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களிலும் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பது வழக்கமானதாக இருப்பதாகவும், இத்தகைய சூழ்நிலைகளுக்கு சுகாதாரத் துறை முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
பெப்ரவரி முதல் ஏப்ரல் வரை நிலவிய கடும் வெப்பம் காரணமாக டெங்கு நுளம்புகள் உருவாகும் வேகம் குறைவாக இருந்ததாகவும், தற்போது காலநிலை மாற்றத்தால் பரவல் அபாயம் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
டெங்கு தடுப்பூசி குறித்து கருத்து தெரிவித்த அவர், இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, வியட்நாம் மற்றும் மலேசியா உள்ளிட்ட நாடுகளில் மூன்று வகையான டெங்கு தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருவதாக கூறினார்.
எனினும், இலங்கையில் அவற்றை அறிமுகப்படுத்துவது குறித்து பல்வேறு அம்சங்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியுள்ளதாகவும், தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டாலும் உடனடியாக நோய்த் தொற்றைக் குறைக்க முடியாது என்றும் அவர் விளக்கினார். இரண்டு டோஸ்களைக் கொண்ட இந்தத் தடுப்பூசி முழுமையாக செயல்பட குறிப்பிட்ட காலம் தேவைப்படுவதுடன், ஏற்கனவே ஒருமுறை டெங்கு பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு அதன் பாதுகாப்புத் திறன் அதிகமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

