நாட்டில் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்வடைந்துள்ளதுடன், உயிரிழந்த நோயாளர்களில் 37 பேர் பெண்கள் ஆவர். மேலும் இதுவரை அடையாளம் காணப்பட்ட டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையும் 75 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.டெங்க…
நாட்டில் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்வடைந்துள்ளதுடன், உயிரிழந்த நோயாளர்களில் 37 பேர் பெண்கள் ஆவர். மேலும் இதுவரை அடையாளம் காணப்பட்ட டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையும் 75 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை நாடளாவிய ரீதியில் ஜனவரி முதலாம் திகதி முதல் ஜூலை 18ஆம் திகதி சனிக்கிழமை (18) வரையான காலப்பகுதியில் மாத்திரம் சுமார் 75 ஆயிரத்து 321 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இம்மாதத்தில் கடந்த 18 நாட்களில் 19,943 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை நாளாந்தம் வெகுவாக அதிகரித்து வருவதைக் காணக்கூடியதாக உள்ளது.
அத்தோடு டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 53 ஆக உயர்வடைந்துள்ளதோடு, டெங்கு பரவலைக் கருத்தில் கொண்டு 162 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதிகள் அதி உயர் டெங்கு அபாயமிக்க பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.மேல் மாகாணத்தில் 39,667 (52.66 சதவீதம்) நோயாளர்கள் பதிவாகியுள்ளதோடு, தென்மாகாணத்தில் 11,610 (15.41 சதவீதம்) நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.
மேலும் கம்பஹா, கொழும்பு, மாத்தறை, கண்டி, களுத்துறை, இரத்தினபுரி, காலி, அம்பாந்தொட்டை, குருநாகல் உள்ளிட்ட மாவட்டங்களிலும் கொழும்பு மாநகரசபைக்கு உட்பட்ட பகுதிகளிலும் தொடர்ச்சியாக அதிக எண்ணிக்கையிலான டெங்கு நோயாளர்கள் பதிவாவதைக் காணக்கூடியதாக உள்ளது. குறிப்பாக தற்போது வரை உயிரிழந்துள்ள நோயாளர்களில் 37 பேர் பெண்கள் எனவும் 5பேர் சிறுவர்கள் எனவும் தரவுகள் சுட்டிக்காட்டியுள்ளன.

