எமது நாட்டின் நிதி அமைப்பின் நம்பகத்தன்மையையும், ஒருமைப்பாட்டையும், பாதுகாப்பதும், நிதிப் பரிவர்த்தனை அறிக்கையிடல் நிர்ணயித்துள்ள தரநிலைகளுக்கு இணங்கச் செயற்படுவதும் இலங்கையின் சர்வதேசக் கடமையாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.இன்றையதினம்(…

எமது நாட்டின் நிதி அமைப்பின் நம்பகத்தன்மையையும், ஒருமைப்பாட்டையும், பாதுகாப்பதும், நிதிப் பரிவர்த்தனை அறிக்கையிடல் நிர்ணயித்துள்ள தரநிலைகளுக்கு இணங்கச் செயற்படுவதும் இலங்கையின் சர்வதேசக் கடமையாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.இன்றையதினம்(9.7.2026) நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில், நிதிப் பரிவர்த்தனை அறிக்கையிடல் நிர்ணயித்துள்ள தரநிலைகளுக்கு இணங்கச் செயற்படுவதை நடைமுறைப்படுத்தத் தவறினால், சர்வதேச நிதி அமைப்பில் இலங்கையின் நம்பகத்தன்மை பாதிக்கப்படும்.வெளிநாட்டுக் கடன்முதலீட்டாளர்களின் நம்பிக்கை குறையும், வெளிநாட்டுக் கடன்களைப் பெறுவதற்கான செலவு அதிகரிக்கும்.அதன் சுமையை இறுதியில் சுமப்பது எமது மக்களே. இந்த உண்மையை நாம் யாரும் மறுக்கவில்லை.அரசாங்கம் மீண்டும் மீண்டும் இந்தச் சபையிடமும் நாட்டிடமும் கூறுவது என்ன “FATF இதைக் கோருகிறது.” “FATF இதைக் கட்டாயப்படுத்துகிறது.” “எனவே இந்தச் சட்டமூலங்களை நிறைவேற்ற வேண்டியது தவிர வேறு வழியில்லை.”FATF தரநிலைகளிலிருந்து இலங்கை விலக வேண்டும் என்று இந்தச் சபையில் யாரும் கோரவில்லை. மாறாக, FATF-இன் தரநிலைகளுக்கு நாம் முழுமையாக இணங்க வேண்டும். ஆனால் FATF எண்ணியபடி— ஆதாரபூர்வமான, விகிதாசாரமான, ஆபத்து மதிப்பீட்டின் அடிப்படையிலான ஒழுங்குமுறையின் மூலமே இணங்க வேண்டும்.அரசியலமைப்பு உரிமை FATF ஒருபோதும் கோராத அதிகாரங்களை நிறைவேற்று அதிகாரத்திற்கு வழங்குவதற்கான காரணமாக FATF-இன் பெயரைப் பயன்படுத்தக் கூடாது. தேசிய பாதுகாப்பும் ஜனநாயகச் சுதந்திரமும் ஒன்றுக்கொன்று முரணானவை அல்ல. ஒரு உண்மையான ஜனநாயக அரசு இரண்டையும் ஒருசேர பாதுகாக்கும்.எனவே, இந்தச் சட்டமூலங்களை மீளாய்வு செய்து, அவை FATF-இன் உண்மையான தரநிலைகளுக்கு அமைவாக இருப்பதையும், நீதித்துறையின் மேற்பார்வையை வலுப்படுத்துவதையும், இந்த நாடாளுமன்றம் பாதுகாக்க வேண்டிய அரசியலமைப்பு உரிமைகளையும் ஜனநாயகச் சுதந்திரங்களையும் உறுதிப்படுத்துவதையும்  நான் வலியுறுத்துகின்றேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.