கிரேக்கத்தின் தெசலோனிகி நகரில் இருந்து ஜெர்மனியின் மெமிங்கன் நகரை நோக்கிப் புறப்பட்ட ரையான்ஏர் நிறுவனத்துக்காக மால்டா ஏர் இயக்கிய போயிங் 737-800 விமானத்தில், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே ஜன்னல் சேதமடைந்ததால் கடுமையான பரபரப்பு ஏற்பட்டது. சம்பவத்தின் போது, ஜன்னல் அருகே அமர்ந்திருந…

கிரேக்கத்தின் தெசலோனிகி நகரில் இருந்து ஜெர்மனியின் மெமிங்கன் நகரை நோக்கிப் புறப்பட்ட ரையான்ஏர் நிறுவனத்துக்காக மால்டா ஏர் இயக்கிய போயிங் 737-800 விமானத்தில், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே ஜன்னல் சேதமடைந்ததால் கடுமையான பரபரப்பு ஏற்பட்டது.

சம்பவத்தின் போது, ஜன்னல் அருகே அமர்ந்திருந்த 61 வயதுடைய செர்பியப் பயணி ஒருவர் திடீர் காற்றழுத்தக் குறைவு காரணமாக ஜன்னல் வழியாக பகுதியளவில் வெளியே இழுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும், அவர் சீட் பெல்ட் அணிந்திருந்ததால் முழுமையாக வெளியேறாமல் தப்பியுள்ளார். அருகில் இருந்த பயணிகள் உடனடியாக அவரைப் பிடித்து விமானத்திற்குள் பாதுகாப்பாக இழுத்து மீட்டனர்.

சம்பவத்தின் போது பலத்த சத்தம் கேட்கப்பட்டதுடன், விமானத்தின் காற்றழுத்தம் திடீரென குறைந்ததால் ஒக்சிஜன் முகமூடிகள் தானாகவே செயல்பட்டதாக பயணிகள் தெரிவித்துள்ளனர். ஆரம்பகட்ட தகவல்களின்படி, இன்ஜினில் ஏற்பட்ட கோளாறால் பறந்த துண்டுகள் ஜன்னலை சேதப்படுத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. இருப்பினும், இதற்கான அதிகாரப்பூர்வ காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

இதனைத் தொடர்ந்து விமானம் அவசரமாக தெசலோனிகி விமான நிலையத்திற்குத் திருப்பி விடப்பட்டு பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. காயமடைந்த பயணிக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதுடன், பின்னர் மாற்று விமானம் மூலம் ஏனைய பயணிகள் ஜெர்மனிக்குப் பயணிக்க ஏற்பாடு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட விமானப் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.