நேட்டோ உச்சி மாநாட்டில் பங்கேற்ற உலகத் தலைவர்களுக்கு துருக்கி ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் வழங்கிய நினைவுப்பரிசு சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. வழக்கமான நினைவு பரிசில்களுக்கு பதிலாக, செயல்படும் பழமையான ரிவால்வர் துப்பாக்கி மற்றும் உயிருள்ள தோட்டாக்கள் அடங்கிய பரிசுப் பெ…

நேட்டோ உச்சி மாநாட்டில் பங்கேற்ற உலகத் தலைவர்களுக்கு துருக்கி ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் வழங்கிய நினைவுப்பரிசு சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. வழக்கமான நினைவு பரிசில்களுக்கு பதிலாக, செயல்படும் பழமையான ரிவால்வர் துப்பாக்கி மற்றும் உயிருள்ள தோட்டாக்கள் அடங்கிய பரிசுப் பெட்டியை அவர் வழங்கியுள்ளார். துருக்கியின் பாதுகாப்புத் துறையின் திறனை உலகிற்கு எடுத்துக்காட்டும் நோக்கில் இந்தப் பரிசு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. ஒவ்வொரு தலைவருக்கும் அவர்களது பெயர் பொறிக்கப்பட்ட, 1990-களில் துருக்கியின் MKE நிறுவனம் தயாரித்த அரிய "Gumusay .357 Magnum" ரிவால்வர் மரப்பெட்டியில் வழங்கப்பட்டுள்ளது. அந்தப் பெட்டியில் துருக்கி தேசியக் கொடி, நேட்டோ சின்னம் மற்றும் "எங்கள் நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் ரிவால்வர் வகை கைத்துப்பாக்கி" என்ற வாசகமும் இடம்பெற்றிருந்தது. இந்தப் பரிசு பல நாடுகளின் தலைவர்களிடையே சுவாரஸ்யமான சூழ்நிலைகளை உருவாக்கியது. பெல்ஜியம் பிரதமர் பார்ட் டி வெவர், மாநாட்டிலிருந்து நாடு திரும்பிய பிறகே தனது பயணப்பையில் உண்மையான துப்பாக்கியும் தோட்டாக்களும் இருப்பதை அறிந்து ஆச்சரியமடைந்தார். பின்னர் அவர் அந்தத் துப்பாக்கியை பிரஸ்ஸல்ஸ் விமான நிலைய காவல்துறையிடம் பாதுகாப்பாக ஒப்படைத்தார். போலந்து ஜனாதிபதிக்குக் கிடைத்த ரிவால்வர் தற்போது சுங்க அனுமதிக்காக வார்சா விமான நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும், பின்னர் பாதுகாப்பான இடத்தில் நினைவுப் பரிசாகவே பாதுகாக்கப்படும் என்றும் அவரது உதவியாளர் தெரிவித்துள்ளார்."இதைக் கொண்டு யாரும் சுடப்போவதில்லை" என்றும் அவர் நகைச்சுவையாகக் குறிப்பிட்டார். நெதர்லாந்து மற்றும் ஸ்வீடன் பிரதமர்களுக்குக் கிடைத்த துப்பாக்கிகள் அந்நாடுகளின் அங்காரா தூதரகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. நெதர்லாந்தின் துப்பாக்கி செயலிழக்கச் செய்யப்படவுள்ள நிலையில், ஸ்வீடனின் துப்பாக்கி இறக்குமதி அனுமதிக்காக காத்திருக்கிறது. இத்தாலி பிரதமர் ஜோர்ஜியா மெலோனி தனது ரிவால்வரை அரசின் அதிகாரப்பூர்வ பரிசுப் பொருட்களுடன் பாதுகாப்பாக வைத்துள்ளார். ஐரோப்பிய ஆணைக்குழுத் தலைவர் உர்சுலா வான் டெர் லெயன் தனது துப்பாக்கியை இராணுவ அருங்காட்சியகத்திற்கு நன்கொடையாக வழங்க முடிவு செய்துள்ளார். அதேபோல் கிரேக்க பிரதமரும் அதை ஏதென்ஸ் போர் அருங்காட்சியகத்திற்கு வழங்கத் திட்டமிட்டுள்ளார். கனடா பிரதமர் மார்க் கார்னி, "நான் கொடுத்த மேப்பிள் சிரப் பரிசு இதனுடன் ஒப்பிடும்போது மிகவும் சாதாரணமாகத் தெரிகிறது" என்று நகைச்சுவையாகக் கூறினார். தனக்கு வழங்கப்பட்ட துப்பாக்கி ஏற்கனவே செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதாகவும், அது கனடாவின் தேசிய போர் அருங்காட்சியகத்தில் இடம்பெறலாம் என்றும் அவர் தெரிவித்தார். உலகளவில் துப்பாக்கி ஏற்றுமதியில் அமெரிக்கா, இத்தாலிக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் உள்ள துருக்கி, தனது ஆயுத உற்பத்தித் திறனை வெளிப்படுத்தும் விதமாக இந்த வித்தியாசமான நினைவுப்பரிசை வழங்கியிருப்பது சர்வதேச அரசியல் வட்டாரங்களில் பரவலாக பேசப்படுகிறது.