கனகராஜா சரவணன் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தைத் தொடர்ந்து, அங்கிருந்த கைதிகள் பலத்த பாதுகாப்புடன் வேறு சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையில் இடம்பெற்ற மோதலில், சிறைச்சாலை அதிகாரிகள் 7பேர் உட்பட 26 பேர…

கனகராஜா சரவணன்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தைத் தொடர்ந்து, அங்கிருந்த கைதிகள் பலத்த பாதுகாப்புடன் வேறு சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையில் இடம்பெற்ற மோதலில், சிறைச்சாலை அதிகாரிகள் 7பேர் உட்பட 26 பேர் உயிரிழந்ததுடன், சுமார் 100 பேர் படுகாயமடைந்தனர். இந்தச் சம்பவத்தையடுத்து, குறித்த சிறையிலிருந்த கைதிகள் பாதுகாப்புக் காரணங்களுக்காக இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.

இதன்படி, இராணுவம் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில், 60 கைதிகள்   செவ்வாய்க்கிழமை (07) மாலை 6.00 மணியளவில் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்டு, சிறைச்சாலை அத்தியட்சகர் இந்திக்க ரங்கண பெரேராவிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதனையொட்டி மட்டக்களப்பு சிறைச்சாலைக்குச் செல்லும் பாதைகளிலும் சுற்றுப்புறங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, 400 கைதிகளை மாத்திரமே பராமரிக்கக்கூடிய வசதிகளைக் கொண்ட மட்டக்களப்பு சிறைச்சாலையில், ஏற்கனவே 960 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டு இடநெருக்கடி நிலவி வந்தது. தற்போது நீர்கொழும்பிலிருந்து கொண்டு வரப்பட்ட 60 கைதிகளையும் சேர்த்து, சிறையிலுள்ள கைதிகளின் மொத்த எண்ணிக்கை 1,020 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, மற்றொரு குழுவினர் பொலன்னறுவை சிறைச்சாலைக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு, அங்குள்ள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவ்வாறு 63 கைதிகள் பொலன்னறுவை சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.