நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் விவகாரத்தில் அரசு பொறுப்பற்ற முறையில் செயற்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார குற்றம்சாட்டியுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில் நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டுமெனில், நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவை பதவியில் இருந்து ந…
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் விவகாரத்தில் அரசு பொறுப்பற்ற முறையில் செயற்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டுமெனில், நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், நீதி அமைச்சரின் செயற்பாடுகளுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் இணைந்து நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றை நாடாளுமன்றத்தில் முன்வைக்கத் தீர்மானித்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும், எதிர்க்கட்சியில் இருந்தபோது அரசை விமர்சித்தவர்கள், தற்போது ஆட்சியில் இருந்து அதேபோன்ற பொறுப்பற்ற நடவடிக்கைகளையே முன்னெடுத்து வருவதாகவும் அவர் சாடினார்.
சிறைச்சாலை நெரிசலைக் குறைக்கும் மாற்று வழிகளை ஆராயாமல், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போகம்பறை சிறைச்சாலை வளாகத்தை மீண்டும் சிறைச்சாலையாக மாற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் நளின் பண்டார குறிப்பிட்டார்.
போகம்பறை சிறைச்சாலை வளாகம் முதலீட்டுச் சபையின் கீழ் கொண்டு வரப்பட்டு சுற்றுலா மற்றும் முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையில் அபிவிருத்தி செய்யப்பட்டதாகவும், அதனை மீண்டும் சிறைச்சாலையாக மாற்றுவது தவறான தீர்மானம் என்றும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், தகுதியான அரச அதிகாரிகளை முறையற்ற வகையில் இடமாற்றம் செய்வது அரச சேவையின் செயல்திறனை பாதிக்கும் என சுட்டிக்காட்டிய அவர், சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவை பதவியில் இருந்து நீக்கியமை நியாயமற்றது என்றும், அவரை மீண்டும் பதவியில் அமர்த்த வேண்டும் என்ற மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பரிந்துரையை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இதேவேளை, மஹர சிறைச்சாலை சம்பவத்தின் போது மேற்கொள்ளப்பட்டதைப் போல, இவ்விவகாரத்திலும் ஜனாதிபதி தலையிட்டு நீதியை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நளின் பண்டார கோரிக்கை விடுத்தார்.

