நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து பிற சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ள கைதிகளின் நீதிமன்ற நடவடிக்கைகளை காணொளி தொழில்நுட்பத்தின் (Video Conferencing) ஊடாக முன்னெடுக்க சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. இதன்படி, நாளை (13) முதல் நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டிய சம்பந்தப…

நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து பிற சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ள கைதிகளின் நீதிமன்ற நடவடிக்கைகளை காணொளி தொழில்நுட்பத்தின் (Video Conferencing) ஊடாக முன்னெடுக்க சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, நாளை (13) முதல் நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டிய சம்பந்தப்பட்ட கைதிகள் காணொளி தொழில்நுட்பம் வழியாகவே விசாரணைகளில் பங்கேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும், சிறைச்சாலைகள் ஆணையாளருமான ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார்.நீர்கொழும்பு சிறைக்கைதிகள் அண்மையில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த சில கைதிகள் பாதுகாப்பு காரணங்களால் நாட்டின் பல்வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டனர்.

இந்த நிலையில், மாற்றப்பட்ட கைதிகளை ஒவ்வொரு நீதிமன்ற அமர்விற்கும் பாதுகாப்புடன் அழைத்துச் செல்வதில் நடைமுறை மற்றும் போக்குவரத்து தொடர்பான சிக்கல்கள் இருப்பதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட கைதிகளின் நீதிமன்ற நடவடிக்கைகள் காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளதாக ஏ.சி. கஜநாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதலால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பீடு செய்வதற்காக சிறைச்சாலைகள் திணைக்களம் மூவர் அடங்கிய விசேட குழுவொன்றை நியமித்துள்ளது.

அந்த குழு சேதங்களின் தன்மை மற்றும் அவற்றுக்கான மதிப்பீட்டு அறிக்கையை விரைவில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.