சமீபத்தில் மோதல் வெடித்த நீர்கொழும்பு சிறைச்சாலை வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது 271 வெற்றுத் தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) இன்று (14) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற…

சமீபத்தில் மோதல் வெடித்த நீர்கொழும்பு சிறைச்சாலை வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது 271 வெற்றுத் தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) இன்று (14) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, இதுவரை 136 சிறைச்சாலை அதிகாரிகள், 141 கைதிகள் மற்றும் 9 விசேட அதிரடிப்படை (STF) அதிகாரிகளிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக CID நீதிமன்றத்துக்கு அறிவித்தது.

சம்பவம் இடம்பெற்ற நேரத்தில் சிறைச்சாலையில் 2,417 கைதிகளும் 166 சிறைச்சாலை ஊழியர்களும் இருந்ததாகவும், அனைத்து கைதிகளிடமிருந்தும் வாக்குமூலங்களைப் பதிவு செய்யுமாறு நீர்கொழும்பு நீதவான் ஷிலனி பெரேரா உத்தரவிட்டார்.

விசாரணைகளின்படி, ஜூலை 5ஆம் திகதி கைதிகளுக்கிடையில் ஏற்பட்ட மோதலே பின்னர் வன்முறையாக மாறியதாகவும், அந்தச் சம்பவத்தில் மூன்று கைதிகள் உயிரிழந்ததுடன் 36 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் CID தெரிவித்தது.

மோதலின் போது சிறைச்சாலையின் நிர்வாகக் கட்டிடம் மற்றும் மருந்தகத்திற்கு சேதம் ஏற்பட்டதுடன், நிலைமையைக் கட்டுப்படுத்த விசேட அதிரடிப்படையினர் அழைக்கப்பட்டதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், விசாரணைகளின் போது ஒரு T-58 துப்பாக்கி, ஒரு தோட்டாப் பெட்டி மற்றும் 271 வெற்றுத் தோட்டாக்கள் சிறைச்சாலை வளாகத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும், விசாரணைக்காக மொத்தம் 60 துப்பாக்கிகள் CID பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான CCTV காட்சிகள் அடங்கிய இரண்டு DVR கருவிகள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், அவற்றை மொரட்டுவ பல்கலைக்கழக கணினி தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி ஆய்வு அறிக்கை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் கொலைக் குற்றம், துப்பாக்கிகள் கட்டளைச் சட்டம் மற்றும் பொதுச் சொத்துக்கள் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக CID தெரிவித்தது.

வழக்கை எதிர்வரும் ஜூலை 16ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.