நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் என்பது திட்டமிட்ட ஒரு செயற்பாடு என்றும், போதைப்பொருள் மற்றும் பாதாளக் குழுக்களுக்கு இடையிலான மோதலே இதற்கு அடிப்படை காரணம் என்றும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை…

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் என்பது திட்டமிட்ட ஒரு செயற்பாடு என்றும், போதைப்பொருள் மற்றும் பாதாளக் குழுக்களுக்கு இடையிலான மோதலே இதற்கு அடிப்படை காரணம் என்றும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (07) நடைபெற்ற நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் தொடர்பான விசேட உரையின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில், “இந்தத் துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் உயிரிழந்த 7 சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் 19 கைதிகளின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறோம். மோதலின் போது சிறைச்சாலையில் இருந்த சி.சி.டி.வி (CCTV) கமராக்கள் மற்றும் ஸ்கேன் இயந்திரங்கள் முதலில் உடைக்கப்பட்டுள்ளன. இது திட்டமிட்ட வன்முறை என்பதற்குச் சான்றாகும். போதைப்பொருள் தொடர்பான தகவல்களைப் பாதுகாப்புத் தரப்பிற்கு வழங்கிய சந்தேகநபர் ஒருவரைத் தாக்கியதிலிருந்தே இந்த மோதல் வெடித்துள்ளது” என்றார்.

இச்சம்பவம் குறித்து ஆராய ஓய்வுபெற்ற நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோ தலைமையில் விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது. வன்முறையைத் தொடர்ந்து, நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்த 734 கைதிகள் பிற சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

10,000 பேர் மட்டுமே தங்கக்கூடிய வசதிகளைக் கொண்ட சிறைச்சாலைகளில், தற்போது சுமார் 27,000 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். நீண்டகாலமாகத் தீர்க்கப்படாத இந்த இடநெருக்கடியே இத்தகைய சிக்கல்களுக்கு அடிப்படை காரணம். சிறைச்சாலைகளில் நிலவும் ஆளணிப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், இரசாயனப் பகுப்பாய்வு அறிக்கைகளைப் பெறுவதில் உள்ள தாமதத்தைக் குறைக்க, அப்பிரிவில் 78 புதிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அரசாங்கம் என்ற ரீதியில் இந்தச் சம்பவத்திற்கு முழுப் பொறுப்பேற்பதாகத் தெரிவித்த அமைச்சர், இவ்வாறான நிலைமை எதிர்காலத்தில் ஏற்படாத வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் உறுதி அளித்தார்.