நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவமானது, போதைப்பொருள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ள அரசியல்வாதிகள் மற்றும் பாதாளக் குழுக்களால் திட்டமிட்டு, அரசாங்கத்தின் சட்ட நடவடிக்கைகளைக் குழப்பும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக சபை முதல்வர…
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவமானது, போதைப்பொருள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ள அரசியல்வாதிகள் மற்றும் பாதாளக் குழுக்களால் திட்டமிட்டு, அரசாங்கத்தின் சட்ட நடவடிக்கைகளைக் குழப்பும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (07) நடைபெற்ற சிறைச்சாலை மோதல் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அமைச்சர் மேலும் கூறுகையில், “1983 கறுப்பு ஜூலை காலத்தில் அரசியல் நோக்கத்திற்காக சிறைக்கைதிகள் படுகொலை செய்யப்பட்டனர். வெலிக்கடைச் சிறைச்சாலையில் இடம்பெற்ற படுகொலைகள் அரசியல் தலையீட்டுடன், இராணுவம் மற்றும் பொலிஸாரைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டன. ஆனால், நீர்கொழும்பு சம்பவம் அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்கும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளில் அரசியல்வாதிகளும் அவர்களது பிள்ளைகளும் சிக்கி வருகின்றனர். இவர்களைப் பாதுகாக்கவும் அரசாங்கத்தை பலவீனப்படுத்தவும் இத்தகைய சதி வேலைகள் முன்னெடுக்கப்படுகின்றனவா என விசாரணைகளில் தேட வேண்டியுள்ளது” என்றார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில், “சிறைச்சாலைகளில் நிலவும் நீண்டகாலப் பிரச்சினைகளைத் தீர்க்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது; இதற்குச் சிறிது காலம் எடுக்கும். நீர்கொழும்பு சம்பவத்தில் ஏதேனும் சூழ்ச்சி உள்ளதா என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும். ஊழல் மிகுந்த பழைய அரசியல் தலைமைத்துவமும், பாதாளக் குழுக்களும் தங்களுக்கு எதிராக எடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகளைத் திசைதிருப்ப இத்தகைய வன்முறைகளைத் திட்டமிட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

