தன்னுடனான நோயாளிகள் 15 பேரை உயிரிழக்கச் செய்த குற்றத்திற்காக, நோய் தணிப்பு சிகிச்சை (Palliative care) நிபுணர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஜெர்மனியின், பெர்லின் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜெர்மனியின் தனியுரிமைச் சட்டத்தின்படி 'ஜோஹன்னஸ் எம்.' (41) என்று மட்டும் அடையாளம் காண…
தன்னுடனான நோயாளிகள் 15 பேரை உயிரிழக்கச் செய்த குற்றத்திற்காக, நோய் தணிப்பு சிகிச்சை (Palliative care) நிபுணர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஜெர்மனியின், பெர்லின் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜெர்மனியின் தனியுரிமைச் சட்டத்தின்படி 'ஜோஹன்னஸ் எம்.' (41) என்று மட்டும் அடையாளம் காணப்பட்ட அந்த மருத்துவர், செப்டம்பர் 2021 முதல் ஜூலை 2024 வரையிலான காலப்பகுதியில், 12 பெண்கள் மற்றும் 3 ஆண்களைக் கொலை செய்ததாக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களின் வயது 25 முதல் 94 வரை ஆகும். இவர்கள் அனைவரும் தீவிர உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தாலும், அவர்கள் உடனடி மரணத்தை நெருங்கும் நிலையில் இல்லை என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. வீடுகளுக்குச் சென்று சிகிச்சை அளித்த அந்த மருத்துவர், நோயாளிகளின் அனுமதியின்றி உயிருக்கு ஆபத்தான மருந்துகளை ஊசி மூலம் செலுத்தி அவர்களைக் கொன்றுள்ளார். மேலும், தனது குற்றங்களை மறைப்பதற்காக நோயாளிகளின் வீடுகளுக்குத் தீ வைத்த சம்பவங்களும் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
ஜூலை 2024-ல் கைதாவதற்குச் சற்று முன்னதாக, ஒரே நாளில் 75 வயது முதியவர் மற்றும் 76 வயது மூதாட்டி என இருவரை அவர் கொன்றுள்ளார். மூதாட்டியின் வீட்டைத் தீயிட்டுக் கொளுத்த அவர் மேற்கொண்ட முயற்சியும் தோல்வியில் முடிந்தது.
சுமார் ஓராண்டு காலமாக நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணையின்போது அமைதி காத்த அந்த மருத்துவர், கடந்த மாதம் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். “நோயாளிகளின் துன்பத்தைப் போக்குவதற்காகவே நான் இவ்வாறு செய்தேன். இது அனைவருக்கும் நல்லது என்று எனக்குள் நம்பிக் கொண்டேன்,” என்று அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட குடும்பங்களிடம் அவர் மன்னிப்புக் கோரினார்.
இந்தக் கொடூரமான குற்றங்கள் பனிப்பாறையின் ஒரு முனை மட்டுமே என்று அதிகாரிகள் கருதுகின்றனர். அவர் மேலும் பல நோயாளிகளைக் கொன்றிருக்கலாம் என்ற சந்தேகத்தில், 76 வழக்குகளைத் தற்போது அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இவை நிரூபிக்கப்பட்டால், இது ஜெர்மனியின் வரலாற்றிலேயே மிக மோசமான சீரியல் கொலை வழக்குகளில் ஒன்றாகப் பதிவாகும்.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் நீதிமன்றத்தில் கதறி அழுதனர். “என் மகள் சாக விரும்பவில்லை,” என்று 25 வயது இளம்பெண்ணின் தாயார் வேதனையுடன் கூறினார். 72 வயது மூதாட்டியின் மகன், “என் தாய் தனது சகோதரியுடன் சுற்றுலா செல்லத் திட்டமிட்டிருந்தார்; அவர் தொடர்ந்து வாழ விரும்பினார்,” என்று தெரிவித்தார்.
நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்ததோடு, சிறைத்தண்டனைக்குப் பிறகு அவரைத் தடுப்புக் காவலில் வைக்கவும், மருத்துவத் துறையில் அவர் மீண்டும் பணியாற்ற வாழ்நாள் தடை விதித்தும் தீர்ப்பளித்துள்ளது.

