நுவரெலியா மாவட்டத்தில் நேற்று (10) அதிகாலை முதல் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக பல பகுதிகள் அடர்ந்த பனிமூட்டத்தால் சூழப்பட்டுள்ளதால், வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் பயணிக்குமாறு போக்குவரத்து பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். நுவரெலியா நகரம், அம்பேவெல, பட்டிப்பொல, ஹக்கல, தலவா…
நுவரெலியா மாவட்டத்தில் நேற்று (10) அதிகாலை முதல் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக பல பகுதிகள் அடர்ந்த பனிமூட்டத்தால் சூழப்பட்டுள்ளதால், வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் பயணிக்குமாறு போக்குவரத்து பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
நுவரெலியா நகரம், அம்பேவெல, பட்டிப்பொல, ஹக்கல, தலவாக்கலை, லிந்துலை, கொட்டகலை, அக்கரப்பத்தனை உள்ளிட்ட பகுதிகளிலும், ஹட்டன்–கொழும்பு மற்றும் ஹட்டன்–நுவரெலியா பிரதான வீதிகளிலும் அதிகாலை முதல் கடும் பனிமூட்டம் நிலவியதாக தெரிவிக்கப்படுகிறது.
சில பகுதிகளில் பார்வைத் தூரம் 20 முதல் 30 மீற்றர் வரை மட்டுமே காணப்பட்டதால், பிரதான வீதிகளில் பயணித்த வாகனங்கள் மிகவும் குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டன.
பனிமூட்டம் நிலவும் பகுதிகளில் வாகனங்களின் முன்விளக்குகளை ஒளிரச் செய்து, குறைந்த வேகத்தில் பயணிப்பதுடன், எதிரே வரும் வாகனங்களை அடையாளம் காண தேவையான இடங்களில் ஒளிச் சமிக்ஞைகளைப் பயன்படுத்துமாறும் போக்குவரத்து பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும், சாரதிகள் தங்களுக்குரிய பாதையிலேயே பயணித்து, தேவையற்ற முந்திச் செல்லும் நடவடிக்கைகளைத் தவிர்க்க வேண்டும் என்றும், பனிமூட்டம் அதிகமாகக் காணப்படும் இடங்களில் கூடுதல் அவதானத்துடன் வாகனங்களை இயக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்டம் தற்போது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும் பகுதியாக இருப்பதால், சுற்றுலாப் பயணிகளும் போக்குவரத்து பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றி பயணிக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

