கனகராஜா சரவணன் மட்டக்களப்பில் விற்பனைக்கு உள்ள மோட்டார் சைக்கிள்களை ஓடிப் பார்த்து வாங்குவதாகக் கூறி, நூதனமான முறையில் திருடிச் சென்ற 27 வயதுடைய இளைஞர் ஒருவரை ஞாயிற்றுக்கிழமை (19) அன்று மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் கைது செய்துள்ளனர். சத்துருக்கொண்டான் பகுதியைச் சேர்ந்த குறித்…

கனகராஜா சரவணன்

மட்டக்களப்பில் விற்பனைக்கு உள்ள மோட்டார் சைக்கிள்களை ஓடிப் பார்த்து வாங்குவதாகக் கூறி, நூதனமான முறையில் திருடிச் சென்ற 27 வயதுடைய இளைஞர் ஒருவரை  ஞாயிற்றுக்கிழமை (19)  அன்று  மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சத்துருக்கொண்டான் பகுதியைச் சேர்ந்த குறித்த நபரிடமிருந்து திருடப்பட்ட மூன்று மோட்டார் சைக்கிள்களும் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த நபர், காத்தான்குடி பகுதியில் உள்ள மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையம் ஒன்றிற்குச் சென்று, அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றை வாங்குவதாகக் கூறி, அதை ஓடிப் பார்க்க வேண்டும் என உரிமையாளரிடம் பெற்றுள்ளார். மோட்டார் சைக்கிளைப் பெற்றுக்கொண்ட அவர், நேராக மட்டக்களப்பு - திருகோணமலை வீதிக்குச் சென்றுள்ளார்.

அங்கு, இணையதளம் ஒன்றில் மோட்டார் சைக்கிள் விற்பனைக்கு என விளம்பரப்படுத்திய கொக்கட்டிச்சோலை பகுதியைச் சேர்ந்த ஒருவரைத் தொடர்புகொண்டு, “உங்கள் மோட்டார் சைக்கிளை நான் வாங்குகிறேன்; வீதி சமிஞ்கை விளக்குக்கு அருகில் வாருங்கள்” என அழைத்துள்ளார்.

விற்பனையாளர் அந்த இடத்திற்கு வந்ததும், “உங்களது மோட்டார் சைக்கிளை ஓடிப் பார்க்க வேண்டும்” எனக் கூறி, ஏற்கனவே காத்தான்குடியில் திருடி வந்த மோட்டார் சைக்கிளை அவரிடம் ஒப்படைத்துவிட்டு, விற்பனையாளரின் மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளார். பின்னர், அந்த மோட்டார் சைக்கிளை வாகரை பகுதியில் விற்றுள்ளார். இதேபோன்று, 2023-ஆம் ஆண்டிலும் மற்றுமொரு மோட்டார் சைக்கிளைத் திருடி விற்றுள்ளமை பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட நபர், இதற்கு முன்னரும் எட்டு குற்றச் செயல்களில் ஈடுபட்டு, நீதிமன்றப் பிணையில் வெளிவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரிடமிருந்து திருடப்பட்ட மூன்று மோட்டார் சைக்கிள்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்த நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ள மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார், இது குறித்த மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.