பாலின அடையாளத்தை மருத்துவ நடைமுறைகள் மூலம் மாற்றிக்கொள்வதற்கு அனுமதியளிக்கும் அரசாங்க சுற்றறிக்கைகளின் சட்டபூர்வத்தன்மையைச் சவால் செய்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை, உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது. இலங்கை விமானப்படையின் முன்னாள் வீரரான சாந்த ஜயதிலகவினால்…

பாலின அடையாளத்தை மருத்துவ நடைமுறைகள் மூலம் மாற்றிக்கொள்வதற்கு அனுமதியளிக்கும் அரசாங்க சுற்றறிக்கைகளின் சட்டபூர்வத்தன்மையைச் சவால் செய்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை, உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது.

இலங்கை விமானப்படையின் முன்னாள் வீரரான சாந்த ஜயதிலகவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க மற்றும் தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உள்ளிட்ட பலர் இந்த மனுவில் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டிருந்தனர்.

தலைமை நீதியரசர் பிரீத்தி பத்மன் சுரசேன மற்றும் நீதியரசர் அர்ஜுன ஒபேயசேகர ஆகியோரைக் கொண்ட இருவர் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மனுதாரர் குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பில் பிரதிவாதிகள் தரப்பில் முன்வைக்கப்பட்ட பூர்வாங்க ஆட்சேபனைகளைக் கருத்தில் கொண்ட நீதிமன்றம், இந்த மனு காலாவதியானது (time-barred) எனக் குறிப்பிட்டு அதைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

தற்போதைய நிர்வாகம் உட்பட அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள், சட்டத்திற்கு முரணான வகையில் பாலின மாற்ற நடைமுறைகளுக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாக மனுதாரர் குற்றம் சுமத்தியிருந்தார்.

உயிரியல் ரீதியான அடிப்படை இன்றி, அறுவை சிகிச்சை மூலம் ஒருவரது பாலினத்தை மாற்றிக்கொள்வதற்கு இலங்கையின் சட்டத்தில் இடமில்லை என அவர் தனது மனுவில் வாதிட்டிருந்தார்.

மேலும், 2016 ஆம் ஆண்டு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்ட வழிகாட்டல்களின் கீழ், மனநல மருத்துவர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் தனிநபர்கள் தங்கள் பாலின அடையாளத்தை மாற்றிக்கொள்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.