உலகளாவிய ரீதியில் பேசுபொருளாக மாறியுள்ள ‘சுப்பிரமணியம்’ என அழைக்கப்படும் நாய், அதன் உரிமையாளரால் பாதயாத்திரைக் குழுவிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு, பொலிஸாரின் அனுமதியுடன் முச்சக்கர வண்டி மூலம் கதிர்காமத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் இன்று (07) காலை இடம்பெற்றுள்ளது. தகவல்க…
உலகளாவிய ரீதியில் பேசுபொருளாக மாறியுள்ள ‘சுப்பிரமணியம்’ என அழைக்கப்படும் நாய், அதன் உரிமையாளரால் பாதயாத்திரைக் குழுவிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு, பொலிஸாரின் அனுமதியுடன் முச்சக்கர வண்டி மூலம் கதிர்காமத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் இன்று (07) காலை இடம்பெற்றுள்ளது.
தகவல்களின் படி, குறித்த நாயின் உரிமையாளர் செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் இருந்து கதிர்காமம் நோக்கி ஆரம்பிக்கப்பட்ட பாதயாத்திரையில் இணைந்திருந்தார்.சுப்பிரமணியம் நாய்
இந்த பாதயாத்திரை முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, கல்முனை, அக்கரைப்பற்று, திருக்கோவில், பொத்துவில் ஆகிய பகுதிகள் வழியாக சுமார் 400 கிலோமீற்றர் தூரத்தை கடந்து, நேற்று (06) இரவு பாணமையை சென்றடைந்தது.
இந்த நிலையில், பாதயாத்திரைக் குழுவை வழிநடத்தியவருக்கும் நாயின் உரிமையாளருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து, உரிமையாளர் அந்தக் குழுவிலிருந்து விலகி, பாணமை பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் தங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அதன் பின்னர், அவர் பாணமை பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகி, ‘சுப்பிரமணியம்’ என பெயரிடப்பட்ட இந்த நாய் தாம் வளர்த்து வந்த செல்லப்பிராணி என்றும், பாதயாத்திரையின் போது தொடர்ந்து தம்முடன் வந்ததாகவும் தெரிவித்தார்.
மேலும், பாதயாத்திரைக் குழுவில் இருந்த ஒருவர் இந்த நாயை பயன்படுத்தி பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டதாகவும், எனவே நாயை தாமே கதிர்காமத்திற்கு அழைத்துச் செல்ல விரும்புவதாகவும் பொலிஸாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.பொலிஸாரால் கைது
இதையடுத்து, பொலிஸார் வழங்கிய அனுமதியின் பேரில், இன்று (07) காலை முச்சக்கர வண்டி மூலம் நாயை அதன் உரிமையாளர் கதிர்காமத்திற்கு அழைத்துச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, இந்த நாய் தொடர்பாக முன்னதாக கல்முனையில் முஸ்லிம் இளைஞர் ஒருவர் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் சம்பவத்தில் அவர் கைது செய்யப்பட்டு பின்னர் நீதிமன்ற பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார். அத்துடன், இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் இரு மதங்களைச் சேர்ந்த சிலர் ஒருவரையொருவர் இழிவுபடுத்தும் வகையில் கருத்துகளைப் பதிவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், சவூதி அரேபியாவில் வசிக்கும் இந்து இளைஞர் ஒருவர் முஸ்லிம் மதத்தை இழிவுபடுத்தும் வகையில் பதிவு வெளியிட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக, அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தச் சம்பவம் சமூக ஊடகங்களில் மத உணர்வுகளுடன் தொடர்புபடுத்தப்பட்டு பரவலாக பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

