பலாலி இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத் திருவிழாவை முன்னிட்டு, ஆலயத்திற்குச் செல்லும் பிரதான பாதையைப் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் திறந்துவிடுமாறு, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். மக்கள…
பலாலி இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத் திருவிழாவை முன்னிட்டு, ஆலயத்திற்குச் செல்லும் பிரதான பாதையைப் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் திறந்துவிடுமாறு, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
மக்களின் இந்தக் கோரிக்கைக்கு உடனடியாகப் பதிலளித்த அமைச்சர், இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பணிப்புரை வழங்கினார். அதற்கமைய, நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன், யாழ்ப்பாண மாவட்ட பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதியை நேரில் சந்தித்து இது குறித்து விரிவாகக் கலந்துரையாடினார்.
பாதுகாப்புக் காரணங்களால் தற்போது இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள குறித்த பிரதான பாதையை, ஆலயத் திருவிழாக்காலங்களில் பக்தர்களின் வசதிக்காகத் திறந்து வைப்பது குறித்து இந்தச் சந்திப்பில் முக்கியமாக ஆராயப்பட்டது.
இதன் விளைவாக, ஆலயத் திருவிழா நடைபெறும் காலப்பகுதியில் தினமும் காலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை, நேரக் கட்டுப்பாட்டுடன் பொதுமக்கள் அந்தப் பாதையைப் பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு மாத காலத்திற்குள் குறித்த பாதையை முழுமையாகப் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் திறந்து விடுவதற்கு இராணுவத்தினர் இணக்கம் தெரிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சந்திப்பின்போது பலாலி கிழக்கு பகுதியில் உள்ள மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. இதில் சாதகமான முன்னேற்றங்கள் எட்டப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் தெரிவித்தார். இச்சந்திப்பில் பலாலி இராணுவ முகாம் பொறுப்பதிகாரி, பொதுத்தொடர்பு இராணுவ அதிகாரி மற்றும் தேசிய மக்கள் சக்தியின் காங்கேசன்துறை அமைப்பாளர் ஆகியோரும் கலந்துகொண்டு, குறித்த விடயங்கள் தொடர்பாக விரிவான கலந்துரையாடல்களில் ஈடுபட்டனர்.

