நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து, அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகளில் 60 பேர் இன்று (07) பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். சிறைச்சாலைகளுக்கிடையிலான பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்து…
நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து, அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகளில் 60 பேர் இன்று (07) பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். சிறைச்சாலைகளுக்கிடையிலான பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்தும் நோக்கிலும், கைதிகளைப் பிரித்து தங்க வைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே இந்த இடமாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.மட்டக்களப்பு சிறைச்சாலை கைதிகளை ஏற்றிச் சென்ற வாகனத் தொடருக்கு விசேட அதிரடிப்படை (STF) மற்றும் இராணுவத்தினர் இணைந்து பாதுகாப்பு வழங்கியிருந்ததுடன், மட்டக்களப்பு சிறைச்சாலையைச் சுற்றிய பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட பதற்றநிலையைத் தொடர்ந்து, சம்பவத்துடன் தொடர்புடைய கைதிகளை வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றும் நடவடிக்கைகளை சிறைச்சாலை நிர்வாகம் முன்னெடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே கைதிகளில் 60 பேர் இன்று யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த இரு தினங்களாகக் கைதிகளுக்கிடையில் இடம்பெற்ற பயங்கர மோதல்களில் சிறைக் காவலர்கள் உட்பட 30 பேர் உயிரிழந்துள்ளமையுடன் 100 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

