மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மட்டும் வாழும் அரிய வகை உயிரினமான 'ஊதா தவளை', அதன் கூர்மையான மூக்கு மற்றும் தடித்த உடல் அமைப்பால் 'பன்றி முக தவளை' என்று அழைக்கப்படுகிறது. டைனோசர்கள் காலத்திலிருந்தே பரிணாம மாற்றங்கள் இன்றி வாழ்ந்து வருவதால், இதை 'வாழும் புதைபடிவம்' என்று விஞ்ஞானிகள்…

மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மட்டும் வாழும் அரிய வகை உயிரினமான 'ஊதா தவளை', அதன் கூர்மையான மூக்கு மற்றும் தடித்த உடல் அமைப்பால் 'பன்றி முக தவளை' என்று அழைக்கப்படுகிறது. டைனோசர்கள் காலத்திலிருந்தே பரிணாம மாற்றங்கள் இன்றி வாழ்ந்து வருவதால், இதை 'வாழும் புதைபடிவம்' என்று விஞ்ஞானிகள் பெருமையுடன் குறிப்பிடுகின்றனர்.

இதன் விசித்திர குணங்கள்:

பூமிக்கடி வாழ்வு: இவை தங்கள் வாழ்நாளின் 95 சதவீதத்தை பூமிக்கு அடியில், 1.3 முதல் 3.7 மீட்டர் ஆழத்தில் கழிக்கின்றன. இனப்பெருக்க காலம்: ஆண்டுக்கு வெறும் இரண்டு வாரங்கள் மட்டுமே, பருவமழைக் காலங்களில் இனப்பெருக்கத்திற்காக இவை பூமிக்கு மேலே வருகின்றன. வரலாற்றுச் சான்று: 2017-ல் ஸ்ரீவில்லிபுத்தூரில் கண்டறியப்பட்ட 'பூபதியின் ஊதா தவளை' (Nasikabatrachus bhupathi), சுமார் 6.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா மற்றும் சீஷெல்ஸ் நாடுகள் 'கோண்ட்வானா' நிலப்பரப்பாக இணைந்திருந்ததை உறுதிப்படுத்தும் முக்கிய உயிரியல் ஆதாரமாக விளங்குகிறது.

காடு அழிப்பு மற்றும் மனித ஆக்கிரமிப்புகளால், பன்னாட்டு இயற்கை பாதுகாப்புச் சங்கத்தின் (IUCN) அழியும் உயிரினங்கள் பட்டியலில் இந்தத் தவளைகள் இணைந்துள்ளன. இந்த அரிய உயிரினத்தைச் பாதுகாக்கத் தமிழக வனத்துறை தற்போது அதிரடி நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, தவளைகள் வசிக்கும் இடங்களைக் கண்டறியும் விரிவான கணக்கெடுப்பு மற்றும் அறிவியல் பூர்வமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளன. அழியும் நிலையில் உள்ள உயிரினங்களின் பட்டியலில் இவற்றைச் சேர்த்து, இதற்கெனத் தனியாக நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு இவற்றை காக்கத் திட்டமிட்டுள்ளது.