ரூபாய் ஒன்பது கோடியே எட்டு லட்சம் பெறுமதியான கொகெய்ன் போதைப்பொருள் தொகையை தனது பயணப்பையில் மறைத்து வைத்து, கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தின், அறிவிப்பதற்கு எதுவுமில்லை என்ற "பசுமைப் பாதை" (Green Channel) வழியாக வெளியேற முயன்ற வெளிநாட்டு விமான பயணி ஒருவர் 07/18 அன்று காலை…

ரூபாய் ஒன்பது கோடியே எட்டு லட்சம் பெறுமதியான கொகெய்ன் போதைப்பொருள் தொகையை தனது பயணப்பையில் மறைத்து வைத்து, கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தின், அறிவிப்பதற்கு எதுவுமில்லை என்ற "பசுமைப் பாதை" (Green Channel) வழியாக வெளியேற முயன்ற வெளிநாட்டு விமான பயணி ஒருவர் 07/18 அன்று காலை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் மலேசியாவில் உள்ள உணவகம் ஒன்றில் பணிபுரியும் 23 வயதுடைய இளைஞர் ஆவார். இவருக்கு 10,000 மலேசிய ரிங்கிட் வழங்குவதாக அளிக்கப்பட்ட வாக்குறுதியின் பேரில் இந்த போதைப்பொருள் தொகை நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இவர் இந்த போதைப்பொருள் தொகையை மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து பெற்றுக்கொண்டு, துபாய்க்கு வருகை தந்து, அங்கிருந்து எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான EK-650 இலக்க விமானம் மூலம் 07/18 அன்று காலை 09.30 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

இதன்போது அவர் கொண்டு வந்த பயணப்பையினுள் இருந்த, சாக்லேட் டோஃபி (Chocolate Toffee) அடங்கிய 03 கொள்கலன்களுக்குள், 01 கிலோ கிராம் 816 கிராம் எடையுடைய இந்த கொகெய்ன் போதைப்பொருள் தொகை 92 குளிகைகளாக (Capsules) தயாரிக்கப்பட்டு, நுணுக்கமாக மறைத்து வைக்கப்பட்டிருந்தது.

கைது செய்யப்பட்ட விமான பயணியும் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட கொகெய்ன் போதைப்பொருள் தொகையும் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.