நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) இலங்கையில் விற்பனை செய்யப்படும் அனைத்துப் பதப்படுத்தப்பட்ட திரவப் பாலும், அபிலடாக்சின் (Aflatoxin) எனப்படும் பூஞ்சைக் காளான் நச்சுத்தன்மைக்கான உச்ச வரம்பிற்கு உட்பட்டிருக்க வேண்டும் என்ற புதிய கட்டுப்பாட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தக் கட்டுப்ப…

நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) இலங்கையில் விற்பனை செய்யப்படும் அனைத்துப் பதப்படுத்தப்பட்ட திரவப் பாலும், அபிலடாக்சின் (Aflatoxin) எனப்படும் பூஞ்சைக் காளான் நச்சுத்தன்மைக்கான உச்ச வரம்பிற்கு உட்பட்டிருக்க வேண்டும் என்ற புதிய கட்டுப்பாட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தக் கட்டுப்பாடு 2027-ஆம் ஆண்டு ஜனவரி 8-ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

நுகர்வோர் விவகார அதிகாரசபைச் சட்டத்தின் பிரகாரம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

புதிய விதிகளின்படி, பின்வரும் தரப்பினருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது:

உற்பத்தியாளர்கள் தயாரிப்பாளர்கள் இறக்குமதியாளர்கள் பொதியிடுவோர் (Packers) விநியோகஸ்தர்கள் களஞ்சிய உரிமையாளர்கள் போக்குவரத்துச் சேவையாளர்கள் வியாபாரிகள்

குறிப்பிடப்பட்ட அபிலடாக்சின் அளவை விட அதிகமாகக் கொண்ட பதப்படுத்தப்பட்ட திரவப் பால்களை உற்பத்தி செய்வதோ, இறக்குமதி செய்வதோ, விற்பனை செய்வதோ அல்லது விநியோகிப்பதோ இனி தடைசெய்யப்பட்டுள்ளது.

அரச வர்த்தமானியின்படி, இலங்கை தரப்படுத்தல் நிறுவனத்தினால் (SLSI) வெளியிடப்பட்ட இலங்கைத் தரம் (SLS) 1815-இன் பிரகாரம், பதப்படுத்தப்பட்ட திரவப் பாலில் அபிலடாக்சின் உள்ளடக்கம் 0.5 மைக்ரோகிராம்/கிலோகிராம் (0.5 µg/kg அல்லது ppb) அளவுக்கு மிகையாக இருக்கக் கூடாது.

இந்த ஒழுங்குமுறை 2027 ஜனவரி 8 முதல் கட்டாயமாக்கப்படுவதால், பதப்படுத்தப்பட்ட திரவப் பால் விநியோகச் சங்கிலி முழுவதும் இந்தத் தரநிலையைப் பின்பற்றுவது கட்டாயமாகும் என்று நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இந்த உத்தரவு நுகர்வோர் விவகார அதிகாரசபையின் கட்டளைப்படி, அதன் தவிசாளர் எஸ். எம். டி. சூரியகுமார என்பவரால் கையொப்பமிடப்பட்டுள்ளது.