தாய்லாந்தின் தலைநகர் பேங்கொக்கில் அமைந்துள்ள களியாட்ட விடுதி ஒன்றில் இன்று (13) அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 27 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 18 பெண்களும் 9 ஆண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவ இடத்தில் தீயணைப்புப்…
தாய்லாந்தின் தலைநகர் பேங்கொக்கில் அமைந்துள்ள களியாட்ட விடுதி ஒன்றில் இன்று (13) அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 27 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் 18 பெண்களும் 9 ஆண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவ இடத்தில் தீயணைப்புப் படையினர் மற்றும் மீட்புக் குழுவினர் தொடர்ந்து மீட்பு மற்றும் தேடுதல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த விபத்தில் மேலும் 63 பேர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சிலரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
தீ விபத்திற்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், சம்பவம் தொடர்பாக தாய்லாந்து பொலிஸார் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணைகளில், குறித்த களியாட்ட விடுதியில் அவசரகால வெளியேறும் வழிகள் போதுமான அளவில் இல்லாதிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் தீப்பரவலின் போது பலர் வெளியேற முடியாமல் சிக்கியதே அதிக உயிரிழப்புக்குக் காரணமாக இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
அண்மைக் காலங்களில் தாய்லாந்தில் பதிவான மிகப் பெரிய தீ விபத்துகளில் ஒன்றாக இந்தச் சம்பவம் கருதப்படுகிறது.

