மாத்தறை மாவட்டத்தின் திக்வெல்ல, கொடஉட பகுதியில் பாடசாலைக்குச் செல்ல பேருந்தில் ஏற முயன்ற 6 வயது சிறுமி ஒருவர் பேருந்தின் பின்சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த சிறுமி, கொடஉட பகுதியைச் சேர்ந்த சனுதி சேனாரா என அடையாளம் காணப்பட்டுள்ளார்…

மாத்தறை மாவட்டத்தின் திக்வெல்ல, கொடஉட பகுதியில் பாடசாலைக்குச் செல்ல பேருந்தில் ஏற முயன்ற 6 வயது சிறுமி ஒருவர் பேருந்தின் பின்சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த சிறுமி, கொடஉட பகுதியைச் சேர்ந்த சனுதி சேனாரா என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் திக்வெல்ல வடக்கு மகா வித்தியாலயத்தில் முதலாம் தரத்தில் கல்வி பயின்று வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை தனது தாயார் மற்றும் இளைய சகோதரனுடன் பேருந்து நிலையத்துக்கு வந்திருந்த சிறுமி, மாத்தறையில் இருந்து மித்தெனிய நோக்கி பயணித்த தனியார் பேருந்தில் ஏற முயன்றபோது விபத்து நேர்ந்துள்ளது.

ஆரம்ப விசாரணைகளின்படி, தாயாரும் இளைய சகோதரனும் முதலில் பேருந்தில் ஏறிய நிலையில், பின்னர் சிறுமி ஏற முயன்றபோது சாரதி பேருந்தை இயக்கியதாக கூறப்படுகிறது. இதனால் சிறுமி கீழே விழுந்து, பேருந்தின் பின்சக்கரத்தில் சிக்கியுள்ளார்.

இந்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்துக்குப் பின்னர் பேருந்தின் சாரதி வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும், அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்துக்கு சென்ற திடீர் மரண விசாரணை அதிகாரி விசாரணைகளை மேற்கொண்டதையடுத்து, சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக மாத்தறை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திக்வெல்ல பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.