பேஸ்புக் தளத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பெண்களின் போலி கணக்குகளை உருவாக்கி, அதன் மூலம் பயனர்களை ஏமாற்றி ஆபாச உரையாடல் தளங்கள், சூதாட்டம் மற்றும் கிரிப்டோகரன்சி போன்ற சந்தேகத்திற்கிடமான தளங்களுக்கு அழைத்துச் செல்லும் ஒரு பாரிய மோசடி வலைப்பின்னல் கண்…
பேஸ்புக் தளத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பெண்களின் போலி கணக்குகளை உருவாக்கி, அதன் மூலம் பயனர்களை ஏமாற்றி ஆபாச உரையாடல் தளங்கள், சூதாட்டம் மற்றும் கிரிப்டோகரன்சி போன்ற சந்தேகத்திற்கிடமான தளங்களுக்கு அழைத்துச் செல்லும் ஒரு பாரிய மோசடி வலைப்பின்னல் கண்டறியப்பட்டுள்ளது.
ஆராய்ச்சியாளர் கலாநிதி சஞ்சன ஹத்துருவ மேற்கொண்ட "பேஸ்புக்கில் பெண்களின் AI கணக்குகள்: அடையாள ஏமாற்று, பாலியல் ரீதியான ஈர்ப்பு மற்றும் தளத்தின் பொறுப்புக்கூறல்" என்ற ஆய்வு அறிக்கையிலேயே இந்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
ஆய்வில் கண்டறியப்பட்ட முக்கிய தகவல்கள்:
முழுமையான போலிகள்: ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 10 பேஸ்புக் கணக்குகளும் உண்மையான நபர்களுக்குச் சொந்தமானவை அல்ல. இவை அனைத்தும் AI மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் புனையப்பட்ட அடையாளங்களைக் கொண்டவை.
ஒருங்கிணைந்த மோசடி: பெப்ரவரி 2025 முதல் ஜூன் 2026 வரையிலான காலப்பகுதியில், 1,706 இடுகைகள் ஆய்வு செய்யப்பட்டன. இவை சுமார் 9 லட்சம் ஈடுபாடுகளை (Likes, Comments, Shares) பெற்றுள்ளன. இந்த கணக்குகள் ஒன்றிணைந்து செயல்படுவதற்கான வலுவான ஆதாரங்கள் உள்ளன; ஒரே மாதிரியான வாசகங்கள் மற்றும் புகைப்படங்கள் பல கணக்குகளில் குறுகிய கால இடைவெளியில் பகிரப்பட்டுள்ளன.
பயனர்களைக் கவரும் யுக்தி: தனிமை, விவாகரத்து, விதவை அல்லது நிதி நெருக்கடியில் இருக்கும் பெண்கள் போன்ற பிம்பங்களை உருவாக்கி, பயனர்களுடன் சிங்கள மொழியில் உரையாடி, அவர்களை வாட்ஸ்அப் போன்ற தனிப்பட்ட செய்திப் பரிமாற்ற தளங்களுக்கு அழைத்துச் செல்வதே இவர்களின் முதன்மை யுக்தியாகும்.
நிதி மோசடி மற்றும் ஆபத்துகள்: பயோ (Bio) மற்றும் கமெண்ட் பகுதியில் உள்ள இணைப்புகள் மூலம் பயனர்கள் ஆபாச உரையாடல் தளங்கள், சூதாட்டங்கள் மற்றும் மோசடியான கிரிப்டோகரன்சி செயலிகளுக்குத் திசைதிருப்பப்படுகின்றனர். பயனர்கள் தனிப்பட்ட தளங்களுக்குச் செல்லும்போது, இந்த நபர்கள் தங்களது அடையாளங்களை மாற்றிக்கொள்வதால் அவர்களைக் கண்டறிவது மிகவும் கடினமாக உள்ளது.
அரசியல் நோக்கம் இல்லை: இந்த வலைப்பின்னல் அரசியல் செல்வாக்கைப் பெறுவதற்காகச் செயல்படவில்லை என்றும், இது முதன்மையாகத் திட்டமிடப்பட்ட ஒரு வணிக ரீதியான போலியான செயற்பாடு (Coordinated commercial inauthentic behaviour) என்றும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இருப்பினும், எதிர்காலத்தில் இவ்வாறான போலி அடையாளங்கள் நிதி மோசடிகளுக்கும், மக்கள் மத்தியில் குழப்பத்தை விளைவிக்கவும் பயன்படுத்தப்படலாம் என கலாநிதி சஞ்சன எச்சரித்துள்ளார்.
பேஸ்புக்கின் பொறுப்புக்கூறல்: ஒரு கணக்கு உண்மையானதா அல்லது AI மூலம் உருவாக்கப்பட்டதா என்பதைப் பயனர்கள் கண்டறியும் வசதிகள் பேஸ்புக்கில் போதிய அளவில் இல்லை என இந்த அறிக்கை விமர்சித்துள்ளது. AI மூலம் உருவாக்கப்பட்ட உள்ளடக்கங்களை வெளிப்படையாக அறிவித்தல், சுயவிவரப் பக்கங்களில் கூடுதல் வெளிப்படைத்தன்மை மற்றும் சந்தேகத்திற்கிடமான இணைப்புகளைக் கண்காணித்தல் போன்ற நடவடிக்கைகளை பேஸ்புக் நிறுவனம் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இணையப் பயனர்கள் தங்களுக்கு வரும் அறிமுகமில்லாத நட்பு கோரிக்கைகள் மற்றும் சந்தேகத்திற்கிடமான இணைப்புகளைக் கையாளும் போது மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

