பெரெண்டினா அபிவிருத்தி சேவைகள் நிறுவனத்தின் சமூக வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், திருகோணமலை மாவட்டத்தின் வெருகல் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கறக்காமனை கிராம அலுவலர் பிரிவைச் சேர்ந்த 7 மீனவக் குடும்பங்களுக்கு, இன்று படகு மற்றும் கொள்ளா வழங்கப்பட்டன. குடும்பம் ஒன்றுக்…

பெரெண்டினா அபிவிருத்தி சேவைகள் நிறுவனத்தின் சமூக வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், திருகோணமலை மாவட்டத்தின் வெருகல் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கறக்காமனை கிராம அலுவலர் பிரிவைச் சேர்ந்த 7 மீனவக் குடும்பங்களுக்கு, இன்று படகு மற்றும் கொள்ளா வழங்கப்பட்டன.

குடும்பம் ஒன்றுக்கு 90,000 ரூபா பெறுமதியுடைய இந்த வாழ்வாதார உதவிகள், மீன்பிடித் தொழிலை பிரதான வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள குடும்பங்களின் உற்பத்தித் திறனை அதிகரித்து, அவர்களின் வருமானத்தை மேம்படுத்துவதற்காக வழங்கப்பட்டன.

இந்த உதவிகள் மூலம் பயனாளிகள் தமது தொழிலை மேலும் வலுப்படுத்தி, நிலையான வருமானத்தைப் பெற்று, தன்னிறைவான வாழ்க்கையை நோக்கி முன்னேறுவதற்கு வாய்ப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமூகத்தின் பாதிக்கப்படக்கூடிய மக்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்தி, நிலையான சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை உருவாக்கும் நோக்குடன் பெரென்டினா அபிவிருத்தி சேவைகள் நிறுவனம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது

அதன் தொடர்ச்சியாக, திருகோணமலை மாவட்டத்திலும் வாழ்வாதாரம், கல்வி, சமூக உட்கட்டமைப்பு, திறன் மேம்பாடு மற்றும் சமூக வலுவூட்டல் ஆகிய துறைகளில் பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன

இந்நிகழ்வில் பெரெண்டினா அபிவிருத்தி சேவைகள் நிறுவனம் சார்பில் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. தயாந்த பெர்னாண்டோ, உதவிப் பொது மேலாளர் திரு. பி. எம். ரகீம், பிராந்திய மேலாளர் திரு. சௌ. தினேஷ், மாவட்ட மேலாளர் திரு. குசாந்த், சமூக மேம்பாட்டு ஒருங்கிணைப்பாளர் திரு. கே. குஜேந்தன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு உதவிகளை வழங்கினர்.

அரசாங்கத்தின் சார்பில் வெருகல் பிரதேச செயலாளர் திரு. ஏ. அனஸ், உதவிப் பிரதேச செயலாளர் திருமதி. துஷிதீபா மற்றும் கிராம அலுவலர், முகாமைத்துவ உதவியாளர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.