பெருந்தோட்ட மக்களின் அடிப்படை சம்பளப் பிரச்சினைக்கு அரசாங்கம் வழங்கிய சிறந்த தீர்வின் காரணமாக, பெருமளவிலான தொழிலாளர்கள் மீண்டும் பெருந்தோட்டத் தொழிற்றுறையில் இணைந்து கொண்டுள்ளதாகப் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார். பாராளுமன்றத…
பெருந்தோட்ட மக்களின் அடிப்படை சம்பளப் பிரச்சினைக்கு அரசாங்கம் வழங்கிய சிறந்த தீர்வின் காரணமாக, பெருமளவிலான தொழிலாளர்கள் மீண்டும் பெருந்தோட்டத் தொழிற்றுறையில் இணைந்து கொண்டுள்ளதாகப் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை ( 09) நடைபெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்தில், ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆரியவங்ச முன்வைத்த கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அமைச்சரின் உரையில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள்: பெருந்தோட்ட மக்களின் சம்பளப் பிரச்சினைக்குத் தற்போதைய அரசாங்கமே சிறந்த தீர்வை வழங்கியுள்ளது. இதன் விளைவாக, தொழிலாளர்கள் மீண்டும் இத்துறைக்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். இருப்பினும், அங்குள்ள அனைத்து அடிப்படைப் பிரச்சினைகளுக்கும் ஒரே கட்டத்தில் தீர்வு காண முடியாது; ஆனால், அவற்றுக்குத் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தியுள்ளோம் என அமைச்சர் உறுதியளித்தார்.
இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள 50 தோட்டக் கிராமங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதற்காக 23 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்திய வீடமைப்பு அபிவிருத்தித் திட்டம் மற்றும் இலங்கை-இந்திய ஒருங்கிணைந்த வீடமைப்புத் திட்டத்தினூடாகப் புதிய வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு பெருமளவிலான வீடுகள் புனரமைக்கப்பட்டு பயனாளர்களுக்கு உரித்துப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வருடம் மேலதிகமாக 5,000 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. 'கிளீன் ஸ்ரீ லங்கா' (Clean Sri Lanka) செயற்திட்டத்தினூடாக, பெருமளவிலான லயன் அறைகள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் புனரமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.
மலையக மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளதாக அமைச்சர் இதன்போது மேலும் தெரிவித்தார்.

