கிளிநொச்சியில் பொது சுகாதார பரிசோதகர் ஒருவரின் பெயரினைத் தவறாகப் பயன்படுத்தி, வர்த்தகர்களிடம் நிதி மோசடியில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கிளிநொச்சி நகரில் கடமையாற்றி, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இடமாற்றம் பெற்றுச் ச…

கிளிநொச்சியில் பொது சுகாதார பரிசோதகர் ஒருவரின் பெயரினைத் தவறாகப் பயன்படுத்தி, வர்த்தகர்களிடம் நிதி மோசடியில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கிளிநொச்சி நகரில் கடமையாற்றி, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இடமாற்றம் பெற்றுச் சென்ற பொது சுகாதார பரிசோதகர் ஒருவரின் பெயரையே மோசடி நபர்கள் பயன்படுத்தியுள்ளனர். "நான் மாவட்டத்திற்கு வெளியே இருக்கிறேன்; எனது உறவினர் ஒருவர் இறந்துவிட்டார் அல்லது அவசரத் தேவைக்காகப் பணம் தேவைப்படுகிறது. பெரிய தொலைபேசியை வீட்டில் விட்டுவிட்டு சிறிய தொலைபேசியை எடுத்து வந்துள்ளேன். இதிலிருந்தே உங்களை அழைக்கிறேன்," எனப் பொய் கூறி, பணத்தைக் கோரி வங்கி கணக்கு இலக்கங்களை அனுப்பி மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

குறிப்பாக, 0760493771 என்ற தொலைபேசி இலக்கத்திலிருந்து தொடர்பு கொள்ளும் நபர், கிளிநொச்சி நகரில் உள்ள வர்த்தகர்களிடம் இவ்வாறு பணம் கோரியுள்ளார். கடந்த சில நாட்களில் ஆறுக்கும் மேற்பட்ட வர்த்தகர்களிடம் இந்த நபர் தொடர்புகொண்டுள்ளார். இதில் சில வர்த்தகர்கள் குறித்த வங்கி கணக்கிற்குப் பணத்தை வைப்புச் செய்துள்ளனர்.

பணம் அனுப்பிய வர்த்தகர்கள், குறித்த பொது சுகாதார பரிசோதகரைத் தொடர்பு கொண்டு, "பணம் கிடைத்துவிட்டதா? மேலும் உதவி தேவையா?" எனக் கேட்ட போதே, இவ்வாறான ஒரு மோசடி நடப்பது குறித்த பரிசோதகருக்குத் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, மோசடி நபர்கள் பயன்படுத்திய வங்கி கணக்கின் விவரங்களை ஆராய்ந்ததில், அதன் உரிமையாளர் கிளிநொச்சி, உதயநகர் கிழக்கு பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தச் சம்பவம் குறித்து பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும், அறிமுகமில்லாத நபர்கள் தொலைபேசி மூலம் பணம் கோரினால், அத்தகவலை உறுதிப்படுத்திய பின்னரே முடிவுகளை எடுக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.