கல்முனை மற்றும் அக்கரைப்பற்று மாநகர சபைகளின் ஆணையாளர் என்.எம். நெளபீஸுக்குக் கடமை நேரத்தில் உயிர் அச்சுறுத்தல் விடுத்ததாகக் கைது செய்யப்பட்ட மாநகர சபை ஊழியர் ஒருவர், நீதிமன்றத்தினால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டும், உரிய நேரத்தில் பிணை எடுக்காத காரணத்தினால் சிறைச்சாலைக்கு அனுப…

கல்முனை மற்றும் அக்கரைப்பற்று மாநகர சபைகளின் ஆணையாளர் என்.எம். நெளபீஸுக்குக் கடமை நேரத்தில் உயிர் அச்சுறுத்தல் விடுத்ததாகக் கைது செய்யப்பட்ட மாநகர சபை ஊழியர் ஒருவர், நீதிமன்றத்தினால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டும், உரிய நேரத்தில் பிணை எடுக்காத காரணத்தினால் சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர், கல்முனை மாநகர சபைக்குள் வைத்து ஆணையாளர் என்.எம். நெளபீஸை, அதே சபையில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் கடமை நேரத்தில் கடுமையாக அச்சுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக ஆணையாளரினால் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து, பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்து சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இந்த வழக்கினை கடந்த திங்கட்கிழமை (13) விசாரித்த கல்முனை நீதிமன்ற நீதிவான் கே.எல்.எம். சாஜித், இருதரப்பு வாதங்களையும் ஆராய்ந்த பின்னர் சந்தேகநபரை இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க உத்தரவிட்டார்.

நீதிமன்றம் பிணை வழங்கிய போதிலும், நீதிமன்ற வேலை நேரம் முடிவடையும் வரை சந்தேகநபர் சார்பில் பிணை எடுப்பதற்கு எவரும் முன்வரவில்லை. இதனால் நீதிமன்ற நடைமுறைப்படி, அவர் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இந்த வழக்கின் மேலதிக விசாரணைகளை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி வரை ஒத்திவைப்பதாகத் தெரிவித்த நீதிவான், அன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உத்தரவிட்டுள்ளார்.

பாறுக் ஷிஹான்