சிரியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அருகில் இன்று அடுத்தடுத்து இரண்டு குண்டுவெடிப்புகள் இடம்பெற்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தச் சம்பவத்தில் நான்கு பொலிஸார் உட்பட 18 பேர் காயமடைந்துள்ளத…

சிரியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அருகில் இன்று அடுத்தடுத்து இரண்டு குண்டுவெடிப்புகள் இடம்பெற்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தச் சம்பவத்தில் நான்கு பொலிஸார் உட்பட 18 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் அமைந்துள்ள ‘ஃபோர் சீசன்ஸ்’ ஹோட்டலுக்கு அருகில் இந்த வெடிப்புகள் இடம்பெற்றுள்ளன. எனினும், சம்பவம் நிகழ்ந்த வேளையில் ஜனாதிபதி மக்ரோன் ஹோட்டலில் தங்கியிருக்கவில்லை என்றும், சிரியாவின் இடைக்கால ஜனாதிபதி அஹ்மத் அல்-ஷராவை சந்திப்பதற்காக அதிபர் மாளிகைக்கு சென்று கொண்டிருந்ததாகவும் பிரான்ஸ் ஜனாதிபதி மாளிகை எலிசி அறிவித்துள்ளது.

மேலும், ஜனாதிபதி மக்ரோன் பாதுகாப்பாக இருப்பதுடன், அவரது சிரியா விஜயத்தின் உத்தியோகபூர்வ நிகழ்ச்சிகள் திட்டமிட்டபடி தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்ட விசாரணைகளின் படி, ஹோட்டலுக்கு எதிரே அமைந்துள்ள சுற்றுலா அமைச்சகம் மற்றும் தேசிய அருங்காட்சியகத்திற்கு இடைப்பட்ட பகுதியில் குப்பைத் தொட்டி ஒன்றிலும், வாகனம் ஒன்றிலும் வெடிபொருட்கள் பொருத்தப்பட்டு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மக்ரோனின் பாதுகாப்பு வாகனப் பேரணி அந்தப் பகுதியைக் கடந்த சில நிமிடங்களிலேயே வெடிப்புகள் இடம்பெற்றதாகவும், இதனைத் தொடர்ந்து கரும்புகை பரவியதுடன் ஒரு வாகனம் தீப்பற்றி எரிந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தைத் தொடர்ந்து டமாஸ்கஸ் நகரின் முக்கிய சாலைகள் மூடப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், இதுவரை எந்த அமைப்பும் தாக்குதலுக்கு பொறுப்பேற்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.