தமிழர் புனர்வாழ்வுக் கழகம் – பிரான்ஸ், உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் – பிரான்ஸ் இணைந்து நடாத்திய 27ஆவது தமிழர் விளையாட்டு விழா 28.06.2026 ஞாயிற்றுக்கிழமை வழமையான L’Aire des Vents Dugny திடலில் இடம்பெற்றது. இயற்கையின் கடினமான சூழலினால் இந்நிகழ்வு சாத்தியமில்லை என்ற நிலை இருந்த ப…

தமிழர் புனர்வாழ்வுக் கழகம் – பிரான்ஸ், உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் – பிரான்ஸ் இணைந்து நடாத்திய 27ஆவது தமிழர் விளையாட்டு விழா 28.06.2026 ஞாயிற்றுக்கிழமை வழமையான L’Aire des Vents Dugny திடலில் இடம்பெற்றது.

இயற்கையின் கடினமான சூழலினால் இந்நிகழ்வு சாத்தியமில்லை என்ற நிலை இருந்த போதும், நிறுத்தாமல் அனுமதி தந்த 93 பிராந்திய பொலிஸ் தலைமையகம், மாகாண அவைத் தலைவர் Stéphane Troussel மற்றும் திடலின் உரித்துடைய நகமன்றங்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 10.30 மணிக்கு இசைப்பிரியா முழங்குவாத்திய (band) அணி இசை அணியுடன் ஆரம்பமாகியது.

பிரதான பொதுச் சுடரினை த. பு. க உபதலைவர் மு. ரவிக்காந் ஏற்றிவைத்தார், தமிழீழத் தேசியக்கொடியினை நாடுகடந்த தமிழீழ அரசின் துணைப் பிரதமர் சி. மகிந்தன் ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து தாயக விடுதலைக்காப் போராடி வீரமரணத்தை தழுவிய மாவீரர்களையும், நாட்டுப்பற்றாளர்களையும், நினைவுகூர்ந்து அக வணக்கம் செலுத்தப்பட்டது.

திடலில் நிறுவப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி நினைவுச்சுடரினை த. பு. க. உறுப்பினர் ஆ. அரியராசா ஏற்றிவைக்க, வருகை தந்த அனைவரும் மலர் வணக்கம் செலுத்தினர்

பாரம்பரிய இண்னியம் இசை நடனத்துடன் நகரபிதாக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள், விருந்தினர்கள், வர்த்தகர்கள், தொண்டர்கள், கலைஞர்கள், சமூக ஊடகத்தினர், மக்கள் அனைவரும் திடலின் மத்தியில் நாட்டப்பட்ட கொடிக்கம்வரை அழைத்து வரப்பட்டனர். பிரான்ஸ் நாட்டின் தேசியக் கொடியினை ஸ்டீபன் துர்சல்லும், ஐரோப்பிய ஒன்றியக் கொடியினை அலன் ஆனந்தனும், த. பு. க. கொடியினை த. பு .க. பிரான்ஸ் உறுப்பினர் த. செல்வரஞ்சனும் ஏற்றிவைத்தனர்.

மங்கள விளக்கினை கலந்துகொண்ட பிரமுகர்கள், வர்த்தக உரிமையாளர்கள், தேசிய செயற்பாட்டாளர்கள் இணைந்து ஏற்றி வைத்துள்ளனர். வருகை தந்த விருந்தினர்கள் மற்றும் இரு இசை அணி இளம் கலைகரஞர்களும் நெறிப்படுத்திய ஆசிரியர்களும் மதிப்பளிக்கப்பட்டுள்ளனர்.இதனைத் தொடர்ந்து விளையாட்டுக்கள், கலை நிகழ்வுகள் ஆரம்பமாகி ஒதுக்கப்பட்ட குடில்களில் சிறப்பாக இடம்பெற்றுள்ளன.சிறப்பு விருந்தினர்கள், தமிழர் புனர்வாழ்வுக் கழக செயற்பாட்டாளர்கள், தாயக செயற்பாட்டாளர்கள், துறைசார் விளையாட்டு செயற்பாட்டாளர்கள், தமிழ்ச் சங்கப் பிரதிநிதிகள், வர்த்தக உரிமையாளர்கள், கலைஞர்கள் மற்றும் பல பிரமுகர்கள் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்களை வழங்கி உற்சாகப்படுத்தினர்.

கல்யாணி உணவகம் மற்றும் சோழன் உணவகம் நிறுவப்பட்டு, சோழன் பல்பொருள் அங்காடியின் 5ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, அதிர்ஷ்டலாப சீட்டு விநியோகிக்கப்பட்டிருந்தது.நல்வாய்ப்பில் புதிய மகிழுந்திற்கு குலுக்கல் முறையில் 1902 என்ற இலக்கம் தெரிவானது. 100 ஆறுதல் பரிசில்களும் தெரிவு செய்யப்பட்டது. இப்பரிசில்களை சோழன் பல்பொருள் வாணிபம் வழங்குகின்றது.

பத்தாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் திரளுடன் இரவு 9.30 மணிவரை நடைபெற்ற இந்நிகழ்வு கொடி இறக்கத்துடன் நிறைவுபெற்றது.

தமிழர் விளையாட்டு விழா நிகழ்வில் பங்கேற்ற அனைத்து வீரர், வீராங்கனைகள், தன்னார்வத் தொண்டர்கள், குடும்பத்தினர்கள், தேசியக் கட்டமைப்புக்கள், கல்வி நிறுவனங்கள், ஊர் சங்கங்கள், விளையாட்டுக் கழகங்கள், வர்த்தக சங்கங்கள், ஊடகங்கள், சமூக வலை ஒளி ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.